search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
    X
    பள்ளி வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

    மதுரையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    மதுரையில் தனியார் பெண்கள் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
    மதுரை:

    மதுரை சிம்மக்கல் வைகை ஆற்றங்கரையில் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இன்று காலை பள்ளி நிர்வாக அலுவலகத்துக்கு டெலிபோன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் “பள்ளியில் வெடிகுண்டு வைத்து இருக்கிறோம். அது சிறிது நேரத்தில் வெடிக்கும்” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாயுடன் பள்ளிக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.

    பள்ளியில் உள்ள அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது பள்ளிக்குள் மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. பள்ளிக்கு வெளியே மாணவிகள் திரண்டு நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    வெடிகுண்டு சோதனை 2 மணி நேரம் நீடித்ததால் பள்ளிக்கு விடுமுறை விடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

    நீண்ட நேர சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    டெலிபோனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று தொலைபேசியில் பேசிய மர்ம நபர் வெடி குண்டு வைத்து இருப்பதாக கூறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
    Next Story
    ×