search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூதலூர் தாசில்தார் ரமேசை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி
    X
    பூதலூர் தாசில்தார் ரமேசை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி

    தஞ்சை அருகே இன்று டெங்கு ஆய்வுக்கு சென்ற தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    தஞ்சை அருகே இன்று டெங்கு ஆய்வுக்கு வந்த தாசில்தாரை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரூபன்(வயது48). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்து பூதலூர் தாசில்தார் ரமேஷ் இன்று காலை 9.45 மணியளவில் அப்பகுதிக்கு ஆய்வுக்காக சென்றார். அப்போது அண்ணா நகர் மெயின்ரோட்டில் தாசில்தார் ஜீப்பை மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் இளங்கோ, செயலாளர் ராஜகுமார், ஆலோசகர் கலியபெருமாள், புண்ணியமூர்த்தி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    அப்போது அவரிடம் இப்பகுதியில் சாலையோரம் திறந்த வெளியில் பல மாதங்களாக கழிவுநீர் ஓடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிகளவில் கொசு உற்பத்தியாகி மக்கள் அவதிப்பட்டு வருகிறோம்.

    இதனால் கழிவு நீரை அகற்றக்கோரி கடந்த மே மாதம் 11-ந்தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையறிந்த அப்போதைய தாசில்தார் கஜேந்திரன், ஆணையர் சித்ரா ஆகியோர் உடன் நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்து சென்றும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மேலும் இதுபற்றி பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இந்த திறந்த வெளியில் ஓடும் கழிவு நீரால் பூதலூர் பகுதியில் தொடர்ந்து வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே உடனடியாக கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
    சாலையோரத்தில் திறந்தவெளியில் செல்லும் கழிவு நீரை படத்தில் காணலாம்

    இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பூதலூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது உடனடியாக இப்பகுதியல் ஓடும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் அப்பகுதிக்கு பொக்லைன் எந்திரத்தை வரவழைக்க உத்தரவிட்டனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் முற்றுகையை கைவிட்டனர்.

    டெங்கு ஆய்வுக்கு வந்த தாசில்தாரை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×