search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தி பொதுக்குழு: தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்தால் சிக்கலாகும்- தினகரன்
    X

    அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தி பொதுக்குழு: தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்தால் சிக்கலாகும்- தினகரன்

    அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தி பொதுக்குழு கூட்டம் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்தால் சிக்கலாகும் தினகரன் பரபரப்பு பேட்டி

    சென்னை:

    அ.தி.மு.க. (அம்மா) அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் இருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இங்கு வந்து பேரவைத் தலைவரை சந்தித்து விளக்கமளிப்பதாக இருந்தது. அதற்குள் தமிழக காவல் துறையினர் அங்கு சென்று எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டுகிறார்கள்.

    செந்தில் பாலாஜியை அணுகி, முதலமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படுங்கள், உங்களுக்கு வேண்டிய அனைத்து சலுகைகளையும் செய்து கொடுக்கின்றோம். எவ்வளவு பணம் வேண்டு மானாலும் கொடுக்கின்றோம். இல்லையென்றால் பல வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதை அவரே என்னிடம் தெரிவித்தார்.

    எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஏற்கெனவே ஆளுநரை சந்தித்து தனித்தனியே கடிதம் கொடுத்து முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அது உட்கட்சி விவகாரம் என்று ஆளுநர் சொன்னதாக எனக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் நான் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து எடப்பாடி அரசை மாற்ற வேண்டும் என்றும் அதற்கு அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும் என்றும் ஆளுநரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

    அதற்குள், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டப்பேரவையை கூட்டுவதற்கு 20-ந் தேதி வரை தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, எங்களுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு திங்கட்கிழமையன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்தது.

    இந்நிலையில்தான் தெரிந்தோ, தெரியாமலோ தி.மு.க. சார்பில் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகி விட்டது.

    எங்களைப் பொறுத்த வரை இந்த ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி. இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாகும். எங்களது எண்ணம், லட்சியம் மிக விரைவில் ஈடேறும்.

    நாங்கள் முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் மாற்றி விட்டு, புதிய முதலமைச்சரைக் கொண்டு அம்மாவின் ஆட்சியை நீட்டிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அதற்காக அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அனுப்பத் தயங்க மாட்டோம்.


    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் குறுக்கு வழியில் செயல்பட நினைக்கிறார்கள். ஆனால் நீதிதேவன் எங்களுடன் இருக்கிறார். எங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும்.

    எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்து விட்டது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய முயன்றார்கள். அது முடியாமல் போய் விட்டது. இறைவனும் நீதியும் எங்களுடன் இருப்பது இப்போது உண்மையாகி விட்டது.

    நாங்கள் பதவிக்காக தர்மயுத்தம் நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சரியான நடிகர்கள். பதவிக்காக எதையும் செய்வார்கள். யாரையும் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வார்கள். தேவை ஏற்பட்டால் கோபால புரத்துக்கு கூட செல்லத் தயங்க மாட்டார்கள்.

    ஓ.பி.எஸ். எஸ்.ஐ.யாக இருந்து ஏட்டாக மாறியவர். அவருக்கு குறுக்கு புத்தியைத் தவிர வேறெதுவும் தெரியாது. எடப்பாடியும், ஓ.பி. எஸ். -ம் சேர்ந்து கூட்டியது பொதுக்குழுவே அல்ல, அது ஒரு கூட்டம்.

    தலைமைக் கழகத்தில் உள்ள ஒருவரை வைத்து நடத்தப்பட்ட கூட்டம்தான் அது. அ.தி.மு.க. என்ற பெயரை யாரும் பயன் படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருக்கிறது. இவர்கள் அந்தப் பெயரை பயன் படுத்தியிருக்கிறார்கள். இது பற்றி யாராவது தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்தால் அவர்கள் கதி என்ன ஆகும் என்று உணராமல் செய்கிறார்கள்.

    அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில்தான் பொதுக்குழு கூட்ட வேண்டும். அந்த அதிகாரம் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கோ, அவரது அனுமதி பெற்ற எனக்கோதான் உண்டு.

    இப்போது அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறார்கள். அது தவறாகும். இது அ.தி.மு.க. (அம்மா) பொதுக்குழு அல்ல. அவர்கள் கூட்டியது புரட்சித்தலைவி அம்மா அணியின் கூட்டம்தான்.

    பொதுக்குழுவை கூட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை அக்டோபர் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை பொதுக்குழு என்ற பேரில் நிறைவேற்றப்படும் தீர்மானம் நீதிமன்றத் தீர்ப்பை கட்டுப்படுத்தாது. உயர் நீதிமன்ற நீதிபதிகளே இதைத் தெரிவித்திருக்கிறார்கள்.

    ஆனால் இ.பி.எஸ்.-ம், ஓ.பி.எஸ்.-ம் அதிகாரம் இருப்பதால் அவர்கள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.

    Next Story
    ×