search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழை: பெரியாறு அணை நீர் மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு
    X

    தொடர் மழை: பெரியாறு அணை நீர் மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இதே போல் கேரளாவிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று 1382 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1776 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 114 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் 114.80 அடியாக இன்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஒரு அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் தொடர்ந்து பெய்து வரும் மழை மேலும் பயனளிக்கும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையில் இருந்து வினாடிக்கு 225 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விடப்படுகிறது.

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லை. இதனால் அணைக்கு நீர் வரத்து நின்று விட்டது. நீர் மட்டம் 28.87 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 32.90 அடியாக உள்ளது. அணைக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 74.78 அடி. அணைக்கு வரும் 3 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு 30.6, தேக்கடி 19.8, கூடலூர் 2, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1, வீரபாண்டி 10 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×