search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே பாலத்தில் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் 25 பேர் காயம்
    X

    சேலம் அருகே பாலத்தில் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் 25 பேர் காயம்

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பட்டர்பிளை பாலத்தில் பஸ் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 25 பேர் காயம் அடைந்தனர்.
    சேலம்:

    சென்னை வண்டலூர் அருகே உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 150 பேர் கடந்த 11-ந் தேதி கேரளா, மூணாறு, கொச்சின் உள்பட பகுதிகளில் 3 பஸ்களில் சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் சுற்றுலா முடித்துவிட்டு நேற்று இரவு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அந்த பஸ்கள் இன்று காலை 7 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பட்டர்ப்ளை மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது ஒரு பஸ் பாலத்தின் வளைவில் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 25 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் விழுப்புரத்தை சேர்ந்த முகிலன் (வயது 21), சென்னையைச் சேர்ந்தவர்கள் பஸ் கிளீனர் பாண்டியன்(25), ஓம்கார் (21), பவன்குமார் (21), அக்‌ஷய் (20), சர்ஷினி (22), ஆல்பிரபா (20), பிரசன்னகுமார் (21), நாகையைச் சேர்ந்த மதன்குமார் (21), திருநெல்வேலி கொக்கிரக் குளத்தை ராகவேந்திரன் (20) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் ஆல்பர்ட் (21), ஜானவி (20), கல்லூரி துறை துணைத்தலைவர் காளீஸ்வரி (32), இவரது மகன் தினேஷ் (5½) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் பஸ்சை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த ஞானசேகரன் (43) என்பவருக்கும் விபத்தில் காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பஸ் நிலைத் தடுமாறியபோது டிரைவர் சாமர்த்தியமாக பிரேக் போட்டதால் பாலத்தில் கவிழ்ந்தது. இல்லையென்றால் பாலத்தில் இருந்து கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் காயத்துடன் உயிர் தப்பினர்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை துணை கமி‌ஷனர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    இந்தவிபத்து குறித்து அன்னதனாப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பாலத்தில பஸ் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
    Next Story
    ×