search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் வந்தவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து வரவேற்றார்.
    X
    ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் வந்தவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து வரவேற்றார்.

    புதுவையில் மீண்டும் விமான சேவை: நாராயணசாமி தொடங்கி வைத்தார்

    புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கு மீண்டும் விமான சேவையை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையில் சிறிய அளவிலான விமான நிலையம் உள்ளது. 1990-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் இருந்து முதன் முதலாக வாயு தூத் விமானங்கள் இயக்கப்பட்டன.

    அப்போது புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் சென்று வந்தன. ஆனால், போதிய வருமானம் இல்லாததால் சில மாதங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    விமான நிலைய ஓடுபாதை குறுகிய நீளமே இருந்ததால் சிறியரக விமானங்களை மட்டுமே இயக்க முடியும் என்ற நிலை இருந்தது. எனவே, விமான ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் 2010-ம் ஆண்டு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. அதுவும் இடையில் நின்று விட்டது. அதன் பிறகு 2014-ம் ஆண்டு மீண்டும் சேவை தொடங்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து இந்த சேவையும் நிறுத்தப்பட்டது.

    புதுவையில் புதிதாக பதவி ஏற்ற காங்கிரஸ் அரசு விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து வந்தது.

    தற்போது மத்திய அரசு சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்தை இணைக்கும் வகையில் ‘உடான்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இதன்படி குறைந்த கட்டணத்தில் விமானங்கள் இயக்கப்படும். இந்த சேவையில் ஏற்படும் நஷ்டங்களை மாநில அரசும், மத்திய அரசும் பகிர்ந்து கொள்ளும்.

    இந்த திட்டத்தை புதுவை அரசு ஏற்றுக்கொண்டு விமான சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் விமான சேவை இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

    புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கு சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தனியார் விமான நிறுவனம் முன்வந்தது.

    இன்று காலை இதன் தொடக்க விழா விமான நிலையத்தில் நடைபெற்றது. ஐதராபாத்தில் இருந்து தினமும் விமானம் காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.20-க்கு புதுவை வரும். அதன் பிறகு 11.40-க்கு இங்கிருந்து புறப்பட்டு 1 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    இதன்படி இன்று காலை ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 11.20 மணிக்கு புதுவை வந்து சேர்ந்தது.

    இந்த விமானம் 78 இருக்கைகள் கொண்டதாகும். 77 பயணிகள் வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து வரவேற்றார்.

    புதுவையில் இருந்து ஐதராபாத் செல்ல 76 பயணிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு போர்டிங் பாஸ் கொடுத்து நாராயணசாமி வழியனுப்பி வைத்தார். பின்னர் விமானம் இங்கிருந்து ஐதராபாத் புறப்பட்டது. நாராயணசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், சிவா, ஜெயமூர்த்தி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், தலைமை செயலாளர் மனோஜ்பரிதா, சுற்றுலாத்துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் முனுசாமி, விமான நிலைய இயக்குனர் தாஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுவையில் இருந்து ஐதராபாத் செல்ல விமான கட்டணம் ரூ.2,449 ஆகும்.


    Next Story
    ×