search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மக்களின் போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்வது இல்லை: திருநாவுக்கரசர்
    X

    தமிழக மக்களின் போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்வது இல்லை: திருநாவுக்கரசர்

    தமிழக மக்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடமான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் ஜோதி யாத்திரை தொடங்கி டெல்லி வீர்பூமியை சென்றடையும். அங்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் ராஜீவ் ஜோதி ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ராஜீவ் ஜோதி யாத்திரை தொடக்கவிழா ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நேற்று காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு துறை மந்திரி காதர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்துகொண்டனர். ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய திருநாவுக்கரசர் ராஜீவ் ஜோதியை ஏற்றி தொடங்கிவைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழக மக்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. இந்திய மக்கள் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கம் தொடங்கியதை போன்று மோடியே வெளியேறு என்று கூறும் நாள் விரைவில் வரும். மத்தியில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமையும். அதை யாரும் தடுக்க முடியாது” என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மாணிக்தாகூர், பிரகாசம், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர்கள் ரங்கநாதன், பவுன் ஆரோக்கியம், முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×