search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது
    X

    கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணு உலையில் பழுது சரி செய்யப்பட்டது மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அணுஉலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது.

    2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம்தேதியன்று முதல் அணு உலையில் முழு அளவிலான மின் உற்பத்தியான 1000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடைந்து வரலாற்று சாதனை படைத்தது. அதே ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி நள்ளிரவு, முதல் அணுஉலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தியும் தொடங்கப்பட்டது.

    அவ்வப்போது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்படுவதும், பின்னர் மின் உற்பத்தி தொடங்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும், எரிந்த யுரேனியம் எரிப்பொருளை அகற்றிவிட்டு புதியதாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிப்பொருட்கள் நிரப்புவதற்காகவும் கடந்த ஏப்ரல் மாதம் 13- ம்தேதி முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இந்த பணிகள் 65 நாட்கள் நடைபெறும் என அணுமின் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் 65 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் முதல் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி செய்வதில் கால தாமதம் ஆகி வருகிறது.

    இதேபோல் 2-வது அணு உலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ம்தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி 1000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடைந்தது. அதில் மார்ச் மாதம் 31-ம்தேதி வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

    கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 அணு உலைகளிலும் சேர்த்து அதிகபட்சமாக 1800 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 2-வது அணு உலையில் ‘வால்வு’ கசிவு காரணமாக நேற்று முன்தினம் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. எரிபொருள் நிரப்பும் பணிக்காக முதல் அணு உலை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 2 அணு உலையும் பழுதடைந்ததால் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தி முற்றிலுமாக தடைபட்டது.

    கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 2 அணு உலைகளின் மூலமாகவும் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்திற்கு மத்திய மின் தொகுப்பு பங்காக 1,125 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்தது. 2 அணு உலைகளும் இருந்தும் மின் உற்பத்தி தடைபட்டதால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களின் தீவிர முயற்சியில் இன்று காலை 2-வது அணு உலையில் ஏற்பட்டிருந்த பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சுமார் 250 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக மின் உற்பத்தி 1000 மெகாவாட் வரை உயர்த்தப்படும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் சாகு தெரிவித்தார்.

    Next Story
    ×