search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் போதை மருந்து தயாரிப்பு: கைதான 10 பேருக்கும் சர்வதேச கும்பலுடன் தொடர்பு
    X

    சென்னையில் போதை மருந்து தயாரிப்பு: கைதான 10 பேருக்கும் சர்வதேச கும்பலுடன் தொடர்பு

    சென்னையில் இருந்து மலேசியாவுக்கு விமானம் மூலம் போதை பொருள் கடத்த முயன்ற 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    சென்னையில் இருந்து மலேசியாவுக்கு விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள 13 கிலோ போதை பொருள் கடத்த முயன்ற தந்தை, மகனான உஸ்மான், ரகுமான் ஆகியோரை போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் செங்குன்றம் பகுதியில் உள்ள சோப்பு பவுடர் தயாரிப்பு தொழிற்சாலையில் போதை பொருள் தயாரிக்கப்படும் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (சென்னை மண்டலம்) அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    செங்குன்றம் புதூர் ஏரிக்கரையோரம் இருந்த சோப்பு பவுடர் தயாரிப்பு தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது தொழிற்சாலையின் பின் புறம் போதை பொருள் தயாரித்த 4 வட மாநில வாலிபர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் இங்கு தயாரிக்கப்படும் போதை மருந்து சென்னையில் உள்ள பல்வேறு குடோனில் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

    அதன்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 11 கிலோ மெத்தம்பெடாமைன், 56 கிலோ பிசியுடோ பெடிலின், 90 கிலோ ஹெராயின் போதை மருந்துகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.71 கோடி ஆகும்.

    மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மலேசிய நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர். இவர்களுக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு உள்ளது.

    போதை மருந்து தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை 24 ஆயிரம் சதுரஅடி கொண்டது. இது கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மார்வாடி ஒருவருக்கு சொந்தமானது.

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு கேரளாவை சேர்ந்த யமுனா அரவிந்த் என்பவர் சோப்பு பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைக்காக மார் வாடியிடம் ஒப்பந்தம் போட்டு வாடகைக்கு எடுத்துள்ளார்.

    மார்வாடியும் சோப்பு பவுடர் தயார் செய்கிறார்கள் என்று நம்பி உள்ளார். ஆனால் தொழிற்சாலையின் பின்புறம் போதை மருந்து தயாரிப்பு பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இந்த தொழிற்சாலையில் கடந்த 13-ந்தேதி இரவு ஏதோ பொருட்கள் மீது தீயை வைத்து எரித்துள்ளனர். தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அங்கிருந்த வடமாநில வாலிபர்களிடம் அருகில் கட்டுமான பணியில் ஈடுபட்ட மேஸ்திரி பெருமாள் என்பவர் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்க கூறி உள்ளார்.

    ஆனால் வடமாநில வாலிபர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் அவரே தகவல் தெரிவித்து தீயணைப்பு வீரர்களை வரவழைத்து தீயை அணைத்து உள்ளனர். வட மாநில வாலிபர்கள் எரித்தது பலகோடி மதிப்புள்ள போதை மருந்துகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சென்னையில் உள்ள குடோன்களில் பதுக்கி வைத்திருக்கும் போதை மருந்துகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு விமானம் மூலம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் சோப்பு பவுடர் தயாரிப்பு நடத்துவதாக ஒப்பந்தம் போட்ட ஜமுனா அரவிந்த் என்பவர் யார்? அவரது உண்மையான பெயர் அதுதானா? அல்லது போலி முகவரி கொடுத்து ஒப்பந்தம் போட்டாரா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×