search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 ஆயிரம் மெகாவாட் மாசு இல்லா மின்சாரம் உற்பத்தி: அதிகாரிகள் தகவல்
    X

    4 ஆயிரம் மெகாவாட் மாசு இல்லா மின்சாரம் உற்பத்தி: அதிகாரிகள் தகவல்

    தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தில் 3-ல் ஒரு பங்கான 4 ஆயிரம் மெகாவாட் மாசு இல்லா மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என அதிகாரிகள் கூறினர்.
    சென்னை:

    தமிழகத்தில் அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், புனல் மின் நிலையம் ஆகியவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. சீசன் காலங்களில் மட்டும் காற்றாலை, சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்து தான் பெரும்பகுதி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றின் மூலம் மாசு அதிகம் ஏற்படுகிறது. காற்றாலை, சூரியசக்தி மூலம் கடந்த ஒரு வாரமாக தினமும் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழக சுற்றுச்சூழலை பாதுகாக்க மாசு இல்லாத மின்சாரம் தயாரிக்க மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவருடைய, தொலைநோக்கு பார்வை- 2023-ன் படி காற்றாலை, சூரியசக்தி மூலம் 6 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்க வீடுகளின் மொட்டை மாடிகளில் மின்தகடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    காற்றாலை மூலம் 20-ந்தேதி 3 ஆயிரத்து 49 மெகாவாட்டும், சூரிய சக்தி மூலம் ஆயிரம் மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதுதவிர கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து 1,152.5 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்தது. வரும் நாட்களிலும் இதே அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

    தமிழகத்தில் சில நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து இருப்பதால் மின்சார தேவையும் அதிகரித்து உள்ளது. காலை 7.50 மணி நிலவரப்படி, 20-ந்தேதி 12,611 மெகாவாட், 21-ந்தேதி 11,998 மெகாவாட், 22-ந்தேதி 12,433 மெகாவாட், 23-ந்தேதி 12,209 மெகாவாட், 24-ந்தேதி 13,031 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.

    தமிழகத்துக்கு தற்போது சராசரியாக 12 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்பட்டு வருகிறது. இதில் 3-ல் ஒரு பங்காக 4 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை, சூரியசக்தி மூலம் மாசு இல்லா மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 
    Next Story
    ×