search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மாயமான தொழில் அதிபரை கொன்று உடல் புதைப்பு
    X

    புதுவையில் மாயமான தொழில் அதிபரை கொன்று உடல் புதைப்பு

    புதுவையில் சமீபகாலமாக அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மாயமான தொழில் அதிபரை கொன்று உடல் புதைக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேதராப்பட்டு:

    மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்தவர் விவேக்பிரசாத் (வயது 40). பெரும் பணக்காரரான இவர் புதுவையில் தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக 1½ ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்தார்.

    இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களையும் புதுவைக்கு அழைத்து வந்திருந்தார்.

    முதலியார்பேட்டை 100 அடி சாலையில் உள்ள ராகவேந்திரா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி குடியிருந்தனர்.

    புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதியான பூந்துறையில் நிலம் வாங்கி அதில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை தொடங்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக 1½ ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதில் கட்டுமான பணிகள் நடந்து வந்தன.

    தொழிற்சாலைக்கான கட்டிடத்தில் சில பகுதிகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தண்ணீர் பிளாண்ட் அமைக்கும் பணி நடந்து வந்தது.

    இந்த பணிகளுக்கு சுல்தான்பேட்டையை சேர்ந்த பாபு (40) என்பவர் உதவியாக இருந்து வந்தார். நில புரோக்கரான இவர் விவேக் பிரசாத்துக்கு நிலம் வாங்கி கொடுத்ததுடன் மற்றும் தேவையான உதவிகளையும் செய்து வந்தார்.

    எனவே விவேக்பிரசாத், பாபுவை தன்கூடவே வைத்திருந்தார். கட்டுமான பணியை கட்டிட மேஸ்திரி கணபதி என்பவர் காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார்.

    கடந்த 1-ந்தேதி மே தினம் என்பதால் கட்டுமான பணிகள் எதுவும் நடக்கவில்லை. அன்று விவேக்பிரசாத் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 2 நாட்களாக அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    எனவே அவரது மனைவி ஜெயந்தி, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வம்பாகீரப்பாளையத்தில் விவேக்பிரசாத்தின் மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்தது.

    எனவே ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை யூகித்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அவருடைய நண்பரான பாபுவிடம் விசாரணை நடத்தினார்கள். எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து கட்டிட மேஸ்திரி கணபதியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் முக்கிய தகவல் கிடைத்தது. விவேக்பிரசாத்தை பாபு கொலை செய்து விட்டதாக அவர் போலீசிடம் தெரிவித்தார்.

    மே 1-ந்தேதி என்னிடம் பாபு போன் செய்து பேசினார். பிளாண்ட் கட்டிடத்தில் ஏறி பார்த்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து விட்டேன். எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. இங்கு உடனே வா என்று கூப்பிட்டார்.

    அதன்படி நான் அங்கு சென்றேன். ஆனால் அவர் நன்றாகத்தான் இருந்தார். ஏன் என்னை பொய் சொல்லி ஏமாற்றி அழைத்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் விவேக்பிரசாத்தை கொலை செய்துவிட்டேன். அவருடைய பிணம் உள்பகுதியில் இருக்கிறது.

    அந்த பிணத்தை எங்காவது கொண்டு சென்று புதைத்துவிடலாம் என்று என்னிடம் கூறினார். இதனால் நான் பயந்துபோனேன். உடனே அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். யாரிடமும் இதுபற்றி சொல்லவில்லை என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து பாபுவிடம் விசாரிப்பதற்காக அவரை தேடினார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். விவேக்பிரசாத்தின் உடலை அந்த பகுதியில் தான் புதைத்திருக்க வேண்டும் என்று கருதினார்கள்.

    எனவே இன்று காலை ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கமணி, தமிழக பகுதி வானூர் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அங்கு சென்றனர்.

    புதுவை போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. இளங்கோ, வானூர் தாசில்தார் பிரபாகரன் ஆகியோரும் வந்தனர். புதுவை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை டாக்டர் ராஜேஸ்வரனும் வரவழைக்கப்பட்டார். மேஸ்திரி கணபதியையும் அழைத்து வந்திருந்தனர்.

    அவர்கள் முன்னிலையில் தோண்டும் பணி நடைபெற்றது. எந்த இடத்தில் பிணத்தை புதைத்திருக்கிறார்கள் என்று தெரியாததால் சந்தேகப்படும்படியாக உள்ள பல இடங்களை தோண்டினார்கள்.

    தொழிற்சாலையில் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ள இடத்தையொட்டி கழிவறைக்கான 2 தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் மண் நிரப்பப்பட்டிருந்தது. எனவே அதற்குள் பிணத்தை புதைத்திருக்கலாம் என கருதி அதை தோண்டினார்கள்.

    5 அடி தோண்டியபோதே அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் தோண்டியபோது உள்ளே உட்கார வைக்கப்பட்ட நிலையில் தார்பாயில் சுற்றி விவேக் பிரசாத்தின் பிணம் இருந்தது. அழுகிய நிலையில் உடல் காணப்பட்டது.

    பிணத்தை தோண்டி எடுத்து கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். பிணத்தை தோண்டும்போது விவேக்பிரசாத்தின் மனைவி ஜெயந்தி உள்ளிட்ட குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

    விவேக்பிரசாத்தை, பாபு எதற்காக கொன்றார், எப்படி கொன்றார்? என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவரை கைது செய்தால் தான் முழு விவரங்களும் தெரியவரும். எனவே போலீசார் பாபுவை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

    புதுவையில் சமீபகாலமாக அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகின்றன. அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ரவுடிகள் என பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொழிலதிபர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×