search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடுமையான வறட்சி: சுசீந்திரம் குளத்தில் குவிந்த பறவைகள்
    X

    கடுமையான வறட்சி: சுசீந்திரம் குளத்தில் குவிந்த பறவைகள்

    குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. சுசீந்திரம் குளத்தில் மட்டும் தண்ணீர் உள்ளதால் பறவைகள் படையெடுத்த வண்ணம் உள்ளன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்கு என இரு பருவக்காலங்களில் மழை பெய்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு இரு பருவக்காலங்களிலும் போதிய அளவு மழை பெய்ய வில்லை. இந்த ஆண்டு இதுவரை மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. பாசன குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. குளங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. முக்கடல் அணை கடந்த 6 மாதமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் நாகர்கோவில் நகருக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து உள்ளதால் மாவட்டம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும் ராஜாக்கமங்கலம், சாமித் தோப்பு பகுதிகளில் உள்ள உப்பளங்களிலும் பறவைகள் அதிகளவு குவிந்திருக்கும். வெளிநாட்டு பறவைகளும் இங்கு வருகை தரும். தற்போது குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

    சுசீந்திரம் குளத்தில் மட்டும் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் சுசீந்திரம் குளத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளன.

    இன்று காலையில் குளத்தில் ஏராளமான பறவைகள் வந்திருந்தது. இது பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற பயணிகள் ஏராளமானோர் அப்பகுதியில் சிறிது நேரம் நின்று பறவைகளின் அழகை ரசித்து சென்றனர். புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×