search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியன் டெஸ்ட்: விராட் கோலி சதத்தால் இந்தியா 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
    X

    செஞ்சூரியன் டெஸ்ட்: விராட் கோலி சதத்தால் இந்தியா 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

    விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்காவை விட 28 ரன்கள் பினதங்கியது. #SAvIND #ViratKohli
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அஸ்வினின் (4 விக்கெட்) அபார பந்து வீச்சால் 335 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் மார்கிராம் 94 ரன்களும், ஹசிம் அம்லா 82 ரன்களும், கேப்டன் டு பிளிசிஸ் 63 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் (46), விராட் கோலியின் (85 அவுட் இல்லை) சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 85 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹர்திக் பாண்டியா மேலும் 4 ரன்கள் எடுத்து 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.



    விராட் கோலி 146 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது அவரின் 21-வது சதமாகும். தொடர்ந்து விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அஸ்வின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அணியின் ஸ்கோர் 280 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 38 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் வந்த சமி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    9-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இசாந்த் சர்மா ஜோடி சேர்ந்தார். இசாந்த சர்மாவை ஒருபுறம் வைத்துக் கொண்டு விராட் கோலி 150 ரன்னைக் கடந்தார். இசாந்த சர்மா 3 ரன்னில் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக 153 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழக்க இந்தியா 92.1 ஓவரில் 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முதல் இன்னிங்சில் இந்தியா 28 ரன்கள் பினதங்கிய நிலையில் உள்ளது. #SAvIND #ViratKohli
    Next Story
    ×