search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஷ்வின் - ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப்பையும் ஒப்பிட வேண்டாம்: கிரிக்கெட் வீரர் சஹால்
    X

    அஷ்வின் - ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப்பையும் ஒப்பிட வேண்டாம்: கிரிக்கெட் வீரர் சஹால்

    அஷ்வின் - ரவீந்திர ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம் என இந்திய சுழல் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.
    விசாகப்பட்டினம்:

    அஷ்வின் - ரவீந்திர ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம் என இந்திய சுழல் பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்காவும், சதீரா சமரவிக்ரமாவும் ஓரளவு நன்றாக விளையாடினர். மற்றவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.



    இதனால் இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் தலா 3 விக்கெட்களும், பாண்டியா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். சஹால் வீசிய 10 ஓவர்களில் 3 மேய்டன் ஓவர்களும் அடங்கும்.

    இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தவான், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. அய்யர் சிறப்பாக விளையாடி 63 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய தவான் 84 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 32.1 ஒவர்களில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்திய சுழல் பந்துவீச்சாளர் சஹால் செய்தியாளர்களிடம் கூறுகையில், அஷ்வின் - ஜடேஜா ஆகியோருடன் என்னையும், குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம் என்றார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். ஆனால், நாங்களோ நான்கு அல்லது ஐந்து தொடர்களில் மட்டுமே விளையாடி உள்ளோம். எனவே அஷ்வின் - ஜடேஜாவுடன் என்னையும் குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம்.  

    இந்திய அணிக்காக எங்களின் சிறந்த ஆட்டத்தை நாங்கள் கொடுத்து வருகிறோம். எனவே அவர்களுடன் எங்களை ஒப்பிடுவது சரியல்ல. நாங்கள் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட உள்ளோம். நாங்கள் இதுவரை வெளிநாடுகளில் விளையாடியதில்லை.

    இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது அனைவரது கனவாகும். ரஞ்சியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். அடுத்து நடைபெற உள்ள டி-20 போட்டிகளில் மட்டுமே எனது கவனம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×