search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த் டெஸ்ட்: தாவித் மலன் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 305/4
    X

    பெர்த் டெஸ்ட்: தாவித் மலன் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 305/4

    ஆஷஸ் தொடரின் பெர்த் டெஸ்டில் தாவித் மலன் (110), பேர்ஸ்டோவ் (75) ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் 3-வது போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று அழைக்கப்படும் பெர்த் வாகா (WACA) மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஹேண்ட்ஸ்காம்ப் நீக்கப்பட்டு மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.



    இங்கிலாந்து அணியின் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக்கிற்கு இது 150-வது டெஸ்ட் போட்டியாகும். முதல் இரண்டு போட்டியில் சோபிக்காத குக், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஏமாற்றமடைந்தார். அடுத்து வின்ஸ் களம் இறங்கினார்.



    ஸ்டோன்மேன் - வின்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஸ்டோன்மேன் அழகான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. வின்ஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேன் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோன்மேன் 48 ரன்னுடனும், ஜோ ரூட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.  ஸடோன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ஜோ ரூட் 20 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஸ்டோன்மேன் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகு, 40 ரன்னுக்குள் இங்கிலாந்து முக்கியமான இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. இங்கிலாந்து 131 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    5-வது விக்கெட்டுக்கு தாவித் மலன் உடன் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைமையை புரிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து ஆஸ்திரேலியா மிரட்டி பார்த்தது, ஆனால், இருவரும் அசராமல் சென்றனர்.

    தாவித் மலன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தாவித் மலனுக்கு இது முதல் சதமாகும். மேலும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் முதல் சதமாகும். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்தார். இவர்கள் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 300-ஐ தாண்டியது.

    மேலும் இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்துள்ளது. தாவித் மலன் 110 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 75 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×