search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 வயதிலேயே இந்திய அணியில் இடம்: வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி
    X

    18 வயதிலேயே இந்திய அணியில் இடம்: வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி

    18 வயதிலேயே இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம் என தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
    மொகாலி:

    கேதர் ஜாதவ் காயமடைந்ததால் இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் 18 வயதான வாஷிங்டன் சுந்தருக்கு, இன்றைய 2-வது ஒரு நாள் போட்டியிலும் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாடுவது தான் உச்சபட்ச கனவாக இருக்கும். அதில் நானும் விதிவிலக்கல்ல. ஆனால் 18 வயதிலேயே இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம். இதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். போட்டிக்கு நான் தயாராகும் முறையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதற்கு கிடைத்த பரிசு தான் இது.

    கடந்த 4 நாட்களாக இந்திய அணியினருடன் இருக்கிறேன். ஆனால் இப்போது தான் இந்திய அணியில் சேர்ந்தது மாதிரி நினைக்கவில்லை. ஏனெனில் அணியில் உள்ள வீரர்களில் பெரும்பாலானவர்களை இதற்கு முன்பு எனக்கு தெரியும். டோனியுடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி பழகி இருக்கிறேன். அதனால் சொந்த வீட்டில் இருப்பது போன்று உணர்கிறேன்.



    ஒரு சுழற்பந்து வீச்சாளராக நான் 10 ஓவர்கள் வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். இதே போல் அணி நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த வரிசையிலும் என்னால் பேட்டிங்கில் பங்களிப்பை அளிக்க முடியும்.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய போதே வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு பரிசீலிக்கப்பட்டார். ஆனால் ‘யோ-யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று கடுமையாக பயிற்சி மேற்கொண்டு யோ-யோ சோதனையில் தேறினார். அதன் பிறகே இந்திய அணிக்கு தேர்வானர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×