search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை உயர்த்த நிர்வாக கமிட்டி சம்மதம்
    X

    இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை உயர்த்த நிர்வாக கமிட்டி சம்மதம்

    இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கையை நிர்வாக கமிட்டி ஏற்றுக்கொண்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஏ, பி, சி என மூன்று தரமாக பிரித்து ஊதியம் கொடுக்கப்படும். ‘ஏ’ கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியும், ‘பி’ பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ.1 கோடியும், ‘சி’ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படுகிறது. வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அதை இப்போது புதுப்பிக்க வேண்டும்.

    இதே போல் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒரு நாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், 20 ஓவர் போட்டி ஒன்றுக்கு ரூ.3 லட்சமும் வீரர்களுக்கு போட்டி கட்டணமாக வழங்கப்படுகிறது. அணிக்கு தேர்வாகி களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு அந்த தொகையில் பாதி கிடைக்கும்.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் அதிகரித்து கொண்டே போவதால், தங்களது ஊதியத்தையும் உயர்த்தி தர வேண்டும் என்று சில மாதங்களாகவே இந்திய வீரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்பிளே, ‘ஏ’ கிரேடு வீரர்களுக்குரிய சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று முறையிட்டார்.

    இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய், உறுப்பினர் டயானா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோரை நேற்று சந்தித்து பேசினர். 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், ஆண்டு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    மேலும் போதிய ஓய்வின்றி தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது குறித்தும் தங்களது ஆட்சேபனைகளை பதிவு செய்தனர். குறிப்பாக இலங்கை தொடர் நிறைவடைந்து அடுத்த 2 நாட்களில் தென்ஆப்பிரிக்க போட்டிக்காக பயணிக்க வேண்டி இருப்பதை சுட்டி காட்டினர். இந்திய வீரர்களின் கோரிக்கையை கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி ஏற்றுக்கொண்டது. அத்துடன், வீரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதற்கும், அதை ஊதிய ஒப்பந்தத்தில் இடம் பெறச் செய்வதற்கும் கொள்கை அளவில் நிர்வாக கமிட்டி ஒப்புக்கொண்டது. இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக வினோத்ராய் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே வீரர்களின் ஊதிய உயர்வுக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி குரல் கொடுத்துள்ளார் ‘இந்திய கிரிக்கெட் வாரியம் நிறைய வருமானம் ஈட்டுகிறது. அதில் கணிசமான தொகை வீரர்களுக்கு கொடுப்பதில் தவறு இல்லையே. எல்லா வீரர்களும் 15 ஆண்டுகள் விளையாடப்போவதில்லை. எனவே அவர்களின் ஊதிய உயர்வுக்கு எனது ஆதரவு உண்டு’ என்று கங்குலி கூறினார்.
    Next Story
    ×