search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் ஆஷஸ்: டி-20 தொடரை 2-1 என கைப்பற்றியது இங்கிலாந்து
    X

    மகளிர் ஆஷஸ்: டி-20 தொடரை 2-1 என கைப்பற்றியது இங்கிலாந்து

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் ஆஷஸ் டி-20 தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
    கென்பெரா:

    ஆஷஸ் தொடர் கிரிக்கெட் வரலாற்றின் பழமையான தொடராகும். இது 1882-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இன்று வரை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். ஆரம்பத்தில் ஆண்கள் அணிகளுக்கு இடையே மட்டும் நடத்தப்பட்ட இந்த தொடர் 1934-ம் ஆண்டு முதல் மகளிர் அணிகளுக்கு இடையேவும் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்க்கான மகளிர் ஆஷஸ் தொடர் கடந்த அக்டோபர் 22-ம் தேதி தொடங்கியது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது. அதன் பின் நடந்த ஒரு டெஸ்ட் போட்டி தொடர் டிராவில் முடிந்தது. டி-20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.



    தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனியும், அலிசா ஹீலியும் களமிறங்கினர். மூனி அதிரடியாக விளையாடினார். ஹீலி 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய எல்சி விலானி 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து மூனியுடன் எல்சி பெரி ஜோடி சேர்ந்தார்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மூனி சதம் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. மூனி 117 ரன்களுடனும், எல்சி பெரி 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெனிலி வையட்டும், டமி பியூமோண்ட்டும் களமிறங்கினர். பியூமோண்ட் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாரா டெய்லர் 5 ரன்களிலும், நட்டலி சீவர் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து டெனிலி வையட்டுடன், இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்து நிதானமான ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

    சிறப்பாக விளையாடிய வையட் அரைசதம் அடித்தார். ஹீதர் நைட் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வையட் சதம் அடித்தார். அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.  அதன்பின் வந்தவர்கள் அணியை வெற்றிபெற செய்தனர். இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டி-20 தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது. சதம் அடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் டெனிலி வையட் ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்நாயகி விருதை இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் தட்டிச்சென்றார்.
    Next Story
    ×