search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 17 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறல்
    X

    கொல்கத்தா டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 17 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறல்

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 17 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. காலையில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் வேலையில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இறுதியில் மதியம் ஒரு மணிக்கு டாஸ் போடப்பட்டது. இலங்கை கேப்டன் சண்டிமல் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, கோலி, ரகானே, சஹா, அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், மொமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர். இலங்கை அணியில் கருணாரத்னே, சமரவிக்ரமா, சண்டிமால், ஷனகா, மேத்யூஸ், டிக்வெல்லா, திரிமன்னே, பெரேரா, ஹெராத், லக்மல் மற்றும் காமேகே ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

    தொடக்க ஓவரை லக்மல் வீச லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்தை சந்தித்த லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்த லோகேஷ் ராகுல் கோல்டன் டக் மூலம் வெளியேறினார்.


    கோல்டன் டக் ஆகிய லோகேஷ் ராகுல்

    ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்ததாலும், காலையில் இருந்து ஈரப்பதமாக இருந்ததாலும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அபாரமாக ஒத்துழைத்தது. இதை பயன்படுத்தி லக்மல் சிறப்பாக பந்து வீசினார். அவரது பந்தை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் திணறினார்கள்.



    அடுத்து தவான் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் க்ளீன் போல்டானர். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார்.

    8.2 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் இந்திய நேரப்படி 2.25 மணிக்கு வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் 3.10-க்கு ஆட்டம் தொடங்கியது. லக்மல் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி எல்.பி.டபிள்யூ ஆனார். கோலி 11 பந்துகள் சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். 11.5 ஓவர்கள் வீசிய நிலையில் மீண்டும் வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது அப்போது மணி 3.38. அதன்பிறகு தொடர்ந்து அதே நிலை நீடித்ததால் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.



    இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 11.5 ஓவரில் 17 ரன்கள் எடுப்பதற்குள் தவான், லோகேஷ் ராகுல் மற்றும் கோலி ஆகிய மூன்று விக்கெட்டுக்களை இழந்துள்ளது. புஜாரா 8 ரன்னுடனும், ரகானே ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நாளை காலை முன்னதாக 9 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    லக்மல் 6 ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
    Next Story
    ×