search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சாதிக்கும் ஆவலில் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த்
    X

    உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சாதிக்கும் ஆவலில் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த்

    உலக பேட்மிண்டன் போட்டி கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. இந்திய நட்சத்திரங்கள் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் சாதிக்கும் ஆவலில் காத்திருக்கிறார்கள்.
    கிளாஸ்கோ:

    23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை நடக்கிறது. பேட்மிண்டனில் மிகவும் கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 21 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், இந்தோனேஷிய ஓபன் பட்டங்களை கைப்பற்றி நட்சத்திர வீரராக வலம் வரும் இந்தியாவின் ஸ்ரீகாந்துக்கு ஆண்கள் பிரிவில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. அவர் முதல் சுற்றில் ரஷியாவின் ஜெர்ஜி சிராந்தை எதிர்கொள்கிறார். இதே போல் அஜய் ஜெயராம், சாய் பிரனீத், சமீர் வர்மா, அஜய் ஜெயராம் ஆகிய இந்தியர்களும் களத்தில் இருக்கிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் 2013 மற்றும் 2014-ல் வெண்கலம் வென்ற சாதனையாளர் ஆவார்.

    இதே போல் 2015-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கத்தை வென்றவரான சாய்னா, இந்த போட்டியின் மூலம் மீண்டும் தன்னை வலிமைமிக்க வீராங்கனையாக வெளிக்காட்ட முயற்சிப்பார். சாய்னாவும், சிந்துவும் நேரடியாக தங்களது 2-வது சுற்றில் விளையாட உள்ளனர்.

    இவர்களுக்கு ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான கரோலினா மரின் (ஸ்பெயின்), அகானா யமாகுச்சி (ஜப்பான்), சங் ஜி ஹூயுன் (சீனத்தைபே), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து) உள்ளிட்டோர் கடும் சவாலாக இருப்பார்கள். ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங் (தைவான்) சொந்த ஊரில் நடக்கும் உலக பல்கலைக்கழக விளையாட்டில் ஆட இருப்பதால் உலக பேட்மிண்டனை தவிர்த்துள்ளார்.

    உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் 22 வயதான பி.வி.சிந்து கூறும் போது, ‘இந்த போட்டிக்கு தயாராகி இருக்கும் விதம் திருப்தி அளிக்கிறது. இதற்காக மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறேன். போட்டியில் களம் காண ஆர்வமாக உள்ளேன். கடந்த ஆண்டு ஒலிம்பிக்குக்கு செல்வதற்கு முன்பாக இருந்ததை விட இப்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன்’ என்றார்.

    40 ஆண்டுகால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளியும், 4 வெண்கலமும் மட்டுமே வென்றுள்ளது. தங்கப்பதக்க ஏக்கத்திற்கு இந்த முறையாவது விடைகொடுப்பார்களா? என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் தலா மூன்று இந்திய ஜோடிகள் கலந்து கொள்கிறது.

    தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ‘அனேகமாக இது வலுவான இந்திய அணி என்று நினைக்கிறேன். சமீபகாலமாக நமது வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். உலகின் சிறந்த வீரர்களை வீழ்த்தும் திறன் படைத்த 4 இந்திய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இப்போதைய காலக்கட்டத்தில் யார் மகுடம் சூடுவார்கள் என்பதை கணிக்க முடியாது. நமது வீரர்களிடம் இருந்து அபார ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். பெண்கள் பிரிவில் சிந்து, சாய்னா பட்டம் வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது’ என்றார். 
    Next Story
    ×