என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேட்ச்களை தவறவிட்டதால் பாதிப்பு: தோல்வி குறித்து மேக்ஸ்வெல் கருத்து
    X

    கேட்ச்களை தவறவிட்டதால் பாதிப்பு: தோல்வி குறித்து மேக்ஸ்வெல் கருத்து

    ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3 முக்கிய ‘கேட்ச்’களை தவறவிட்டது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்று கேப்டன் மேக்ஸ்வெல் தெரிவித்தார்.
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியின் பிளே ஆப் சுற்று வாய்பை தடுக்கும் வகையில் குஜராத் லயன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஹசிம் அம்லா சதம் அடித்தார். அவர் 60 பந்தில் 104 ரன்னும் (8 பவுண்டரி, 5 சிக்சர்), ஷான் மார்ஷ் 43 பந்தில் 58 ரன்னும் ( 6 பவுண்டரி) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய குஜராத் லயன்ஸ் 19.4 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமித் 39 பந்தில் 74 ரன்னும் ( 8 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரெய்னா 25 பந்தில் 39 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    குஜராத் லயன்ஸ் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. பஞ்சாப்பின் ‘பிளே ஆப்’ வாய்ப்பை பாதிக்கும் வகையில் இந்த வெற்றியை பெற்றது. பஞ்சாப் வீரர் அம்லாவின் சதம் எந்த பலனும் இல்லாமல் போனது.

    இந்த வெற்றி குறித்து குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் ரெய்னா கூறியதாவது:-



    190 ரன் இலக்கை எடுக்க வேண்டும் என்றால் தொடக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். எங்கள் அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது.

    சுமித்தும், இஷான் கிஷானும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் நானும், தினேஷ் கார்த்திக்கும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தோம். எங்களது பந்து வீச்சு நன்றாகவே இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் மேக்ஸ்வெல் கூறியதாவது:-



    189 ரன் குவித்தும் தோற்றத்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. 3 முக்கிய ‘கேட்ச்’களை தவறவிட்டது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நன்றாக விளையாடியும் தோற்றது அழகான பேரழிவை காட்டியது. இனி வரும் போட்டிகளில் வெற்றிக்காக போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×