search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுகள் பறிமுதல்
    X

    உத்தரபிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுகள் பறிமுதல்

    உத்தரபிரதேசத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுகள் சோப்பு தயாரிப்பாளருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கான்பூர்:

    மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது.

    அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வங்கிகள் மூலம் மக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது. கடந்த ஆண்டு அப்படி திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிவுக்கு வந்தது.

    பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருந்தால் அது குற்றமாக கருதப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்தது. இது தொடர்பாக ஆங்காங்கே அடிக்கடி சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு வீட்டுக்குள் கட்டு கட்டாக பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய விசாரணைக்குழுவினர் உத்தர பிரதேச மாநில போலீசார் உதவியுடன் ஒரு கட்டிடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஏராளமான பெட்டிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை ஆய்வு செய்தபோது சுமார் ரூ.100 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    சோப்பு தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அந்த பழைய ரூபாய் நோட்டுகள் சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டுக்களை கொஞ்சம் கொஞ்சமாக புதிய நோட்டுகளாக மாற்றி விடலாம் என்று திட்டமிட்டு அவர்கள் சுவரப் நகர் பகுதியில் ஒரு கட்டிடத்தில் பதுக் கியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி உத்தரபிரதேச போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வருமான வரித்துறையினர் ரூ.100 கோடியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பழைய ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் குவித்து வைத்திருந்த தொழில் அதிபர்கள் அவற்றை எப்படி மாற்றுகிறார்கள் என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×