search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் பயணம்: மோடி அரசு மீது ராகுல்காந்தி பாய்ச்சல்
    X

    உ.பி.யில் பயணம்: மோடி அரசு மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

    உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சித்து பொதுக்கூட்டத்தில் பேசினார். #Congress #RahulGandhi #Modi
    அமேதி:

    குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றது.

    இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிரசார வியூகம் முக்கிய பங்கு வகித்தது. பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். இது மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள ஆர்வத்தை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது வெளிமாநில பயணத்தின்போது கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி அங்கும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

    காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக உத்தரபிர தேசம் சென்றார். லக்னோ விமான நிலையத்தில் அவருக்கு மாநில காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து லக்னோ ரேபரேலி சாலையில் அமைந்துள்ள அனுமான் கோவிலுக்கு ராகுல்காந்தி சென்று வழிபாடு நடத்தினார். அதைத் தொடர்ந்து ரேபரேலியில் உள்ள சலோன் பகுதிக்கு சென்றார். அங்குள்ள மக்களுடன் சங்கராந்தி விழாவை கொண்டாடினார்.



    ரேபரேலியில் இருந்து தனது தொகுதியான அமேதிக்கு சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு உள்ள சாலையோர கடைக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பருடன் சென்று தேநீர் அருந்தினார்.

    ரேபரேலி மற்றும் அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியபோது பிரதமர் மோடி அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

    அமேதி மற்றும் ரேபரேலி காங்கிரசின் கோட்டையாகும். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை காங்கிரஸ் மேற்கொண்டது. நெடுஞ்சாலை, உணவு பூங்கா, புதிய ரெயில், பெட்ரோலிய கல்வி நிறுவனம், ஐ.ஐ.டி. ஆகிய அனைத்தும் காங்கிரஸ் எம்.பி.க்களால் கொண்டு வரப்பட்டது. ஆனால் பா.ஜனதா அரசு வெற்று பிரசாரத்தையும், பொய் வாக்குறுதிகளையும் மட்டுமே மேற்கொண்டது. மோடி அரசால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 3½ ஆண்டுகளாகியும் உறுதி அளித்தப்படி ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யாதது ஏன்?

    இதேபோல உறுதி அளித்தப்படி இளைஞர்ளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. பா.ஜனதாவின் பொய்களையும், காங்கிரசின் சாதனை திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    அமேதி, ரேபரேலியில் மாற்றாந்தாய் மனபோக்குடன் மோடியும், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
    Next Story
    ×