search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் பாணியில் தேர்தல் பணி -  4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் அதிரடி வியூகம்
    X

    குஜராத் பாணியில் தேர்தல் பணி - 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் அதிரடி வியூகம்

    குஜராத் பாணியில் தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களிலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கையில் எடுத்து போராடி அந்த மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. #Congress #RahulGandhi #Election
    புதுடெல்லி:

    பாரதீய ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருப்பதுடன் தற்போது 19 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது.

    அதே நேரத்தில் நாட்டில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் தொடர்ந்து பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து தற்போது 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

    காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க போவதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார். காங்கிரஸ் தற்போது கர்நாடகா, பஞ்சாப், மேகாலயா, மிசோரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது.

    இந்த மாநில ஆட்சிகளையும் அகற்றிவிட்டு, பா. ஜனதா அல்லது அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது பாரதீய ஜனதாவின் திட்டமாகும்.



    அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் இழந்த மாநிலங்களை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. மிக விரைவில் கர்நாடகா, சதீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மற்ற 3 மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கைவசம் உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைப்பதுடன் மற்ற 3 மாநிலங்களிலும் பாரதீய ஜனதாவை வீழ்த்திவிட்டு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் வியூகங்களை வகுத்துள்ளது.

    குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு காங்கிரஸ் கடும் சவாலாக இருந்தது. காங்கிரஸ் தோற்றுவிட்டாலும் கூட கடந்த தேர்தலைவிட 19 இடங்களை கூடுதலாக கைப்பற்றியது. கணிசமான ஓட்டு சதவீதத்தையும் பெற்றது.

    இதற்கு குஜராத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்தல் பணியாற்றியது தான் முக்கிய காரணமாக இருந்தது. அந்த மாநிலத்தில் என்ன பிரச்சினை உள்ளது. மக்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து பல்வேறு தரப்பு மக்களையும் காங்கிரஸ் தன் பக்கம் இழுப்பதற்கு முயற்சி மேற்கொண்டது.

    அதன் காரணமாகத்தான் குஜராத்தில் காங்கிரசுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்தது. குறிப்பாக விவசாயம் அதிகம் உள்ள சவுராஸ்டிரா பகுதியில் விவசாயிகள் பிரச்சினைகளை மையமாக வைத்து காங்கிரஸ் பிரசாரங்களை மேற்கொண்டது.

    இதன் காரணமாக சவுராஸ்டிராவில் பாரதீய ஜனதாவைவிட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. இதேபோன்று தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களிலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கையில் எடுத்து போராடி அந்த மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இதற்காக பல்வேறு தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஏற்கனவே காங்கிரசில் பல பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அமைப்பு சாரா தொழிலாளர்கள் காங்கிரஸ், மீனவர் காங்கிரஸ், கல்வியாளர்கள் காங்கிரஸ், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பிரிவு, மாணவர் பிரிவு என பல பிரிவுகளை 4 மாநிலங்களிலும் தொடங்கி தீவிர பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே அதன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த அமைப்புகள் ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இதற்கு அந்த பகுதியில் உறுப்பினர்கள் சேர்த்து வருகிறார்கள். அடுத்த கட்டமாக அவர்களின் பிரச்சினையை மையமாக வைத்து போராட்டங்களை தொடங்க உள்ளனர்.

    ராஜஸ்தானில் ஏற்கனவே இந்த அமைப்புகளை தொடங்கி போராட்டங்களை தொடங்கிவிட்டனர். அந்த மாநிலத்தின் தலைவர் சச்சின் பைலட் விவசாயிகள் பேரணி நடத்தி மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கணிசமாக உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதேபோல விவசாயிகளும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் பாதிக்கப்படும் அம்சங்களை முன்னிலைப்படுத்தி அதற்கான தீர்வு என்ன என்பதை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

    இதன்மூலம் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. இது சம்பந்தமாக அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அரபிந்த்சிங் கூறியதாவது:-

    தொழிலாளர் வர்க்கத்தை காங்கிரஸ் பக்கம் இழுக்க வேண்டும் என்பது தான் எங்களது முக்கிய குறிக்கோள். இதுசம்பந்தமாக நாங்கள் பல்வேறு தரப்பினரையும் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் பிரச்சினைகளை நாங்கள் நேரடியாக கையாண்டு வருகிறோம்.

    அடிமட்ட அளவில் சென்று அவர்களை சந்தித்து காங்கிரஸ் பக்கம் இழுக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் அதன் பணிகளை ஏற்கனவே தொடங்கி செய்து வருகின்றன. ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கி வருகிறோம். இதன் மூலம் கட்சிக்கும், அவர்களுக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி உள்ளோம். இது நல்ல பலனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறும்போது, மாணவர்களை காங்கிரஸ் பக்கம் இழுப்பதற்கு ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக மாணவர் பேரவை தேர்தலில் காங்கிரஸ் சிறந்த வெற்றியை பெற்றுள்ளது. இது மாநில தேர்தல்களில் காங்கிரசுக்கு சாதகமாக அமையும். வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதலங்களையும் காங்கிரசுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறோம். அதுவும் நல்ல பலனை தந்துள்ளது என்று கூறினார்.

    சதீஷ்கார் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பி.எல்.குனியா கூறும்போது, சதீஷ்கார் மாநிலத்தில் கடந்த தேர்தலில் மயிரிழையில் தான் ஆட்சியை பறிகொடுத்தோம். ஆனால் இந்த தடவை மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுவோம். ஒவ்வொரு பகுதியிலும் அடிமட்ட அளவில் இருந்து கட்சிப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம்.

    கடந்த தேர்தலில் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு வட்டார அளவிலும் தேர்தல் பணிக்காக தலைவர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. எனவே சதீஷ்கார் மாநிலத்தில் எளிதாக ஆட்சியை பிடிப்போம் என்று கூறினார்.

    #tamilnews #Congress #RahulGandhi #Election 
    Next Story
    ×