search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே பள்ளியில் வேலை பார்த்து காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதி பணி நீக்கம்
    X

    ஒரே பள்ளியில் வேலை பார்த்து காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதி பணி நீக்கம்

    ஒரே பள்ளியில் வேலை பார்த்து காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதியை திருமணம் நடந்த அன்று பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்தது.

    திருமணம் நடந்த அன்று அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதுபற்றி நிர்வாக சேர்மன் பஷீர்மசோதி கூறும்போது, இந்த ஆசிரியர் தம்பதி திருமணத்திற்கு முன்பு காதலித்து இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் இதுபோல் காதல்வயப்படுவதால் அது மாணவர்களை பாதிக்கும். எனவே அவர்களை பணி நீக்கம் செய்திருக்கிறோம் என்று கூறினார்.

    ஆனால் இதை ஆசிரியர் தம்பதி மறுத்தனர். இதுபற்றி தாரிக்பகத் கூறியதாவது:-

    எங்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பே எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். திருமணம் நிச்சயம் நடந்ததும் எனது மனைவி பள்ளி ஆசிரியர்களுக்கு விருந்து அளித்தார்.

    அப்போதெல்லாம் நிர்வாகம் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. நாங்கள் காதல் வயப்பட்டதாக தெரிந்திருந்தால் அப்போது கேட்டிருக்கலாம். எங்களிடம் ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை.

    திருமணத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் விடுமுறை கேட்டு விண்ணப்பித்திருந்தோம். பள்ளி நிர்வாகம் எங்களுக்கு விடுமுறை அளித்தது. நாங்கள் காதலிக்கவில்லை. அப்படி காதலித்திருந்தால் முன்கூட்டியே நிர்வாகத்திற்கு ஏன் தெரியவில்லை. நாங்கள் காதலித்ததாக திருமண அறிவிப்பு வெளியிட்டதற்கு பிறகு சொல்கிறார்கள்.

    நாங்கள் முறையாக திருமணம் செய்திருக்கிறோம். எந்த குற்றத்தையோ, வேதனைப்படும்படியான சம்பவத்தையோ செய்யவில்லை.

    இவ்வாறு தாரிக்பகத் கூறினார்.

    Next Story
    ×