search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது’ - பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    ‘குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது’ - பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

    குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக பிரதமர் மோடி பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
    பனஸ்கந்தா:

    குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக பிரதமர் மோடி பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

    குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. எஞ்சிய 93 தொகுதிகளுக்கு, 2-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    பிரதமர் மோடி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் பனஸ்கந்தா உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். அப்போது, அண்மையில் காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மணிசங்கர் அய்யர், பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்து பேசியதாக கூறப்படுவது குறித்து, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    அவர் பேசுகையில் கூறியதாவது:-

    அண்மையில் மணிசங்கர் அய்யர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு மந்திரி, இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அழைத்து ரகசியமாக பேசியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு 3 மணி நேரம் நடந்து இருக்கிறது.

    இதைத் தொடர்ந்துதான் மறுநாள் அவர் என்னை இழிபிறவி என்று அவமதித்தார். இது மிகவும் தீவிரமானதொரு விஷயம். மணிசங்கர் அய்யர் பக்கத்து நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்கவேண்டும்.

    இதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் சர்தார் அர்ஷத் ரபிக், குஜராத் மாநில முதல்-மந்திரியாக அகமது பட்டேலை நியமிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். வேறொரு நாட்டு ராணுவத்தின் உளவு பிரிவில் முக்கிய பதவி வகித்தவர்கள் அகமது பட்டேலை முதல்-மந்திரியாக நியமிக்கவேண்டும் என்று ஏன் கூறுகின்றனர்?...

    ஒரு புறம் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி குஜராத் தேர்தலில் தலையிடுகிறார். மறுபுறம், பாகிஸ்தான் தலைவர்கள் மணிசங்கர் அய்யர் வீட்டில் சந்தித்து பேசுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளால் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன அல்லவா?... எனவே காங்கிரஸ், தான் என்ன செய்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்.

    பா.ஜனதா எப்போதும் வளர்ச்சியை மட்டும் விரும்புகிறது. அதைப் பற்றித்தான் பேசும். ஆனால் காங்கிரஸ் ஏழைகளை முன்னேறவிடாமல் தடுக்கிறது. இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம். குஜராத் தேர்தல் வளர்ச்சிக்கும், குடும்ப அரசியலுக்கும் இடையே நடக்கும் யுத்தம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, ஆமதாபாத் நகரில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா கூறும்போது, “குஜராத்தில் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் தூதரை காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங், மணிசங்கர் அய்யர், முன்னாள் ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசியிருக்கின்றனர். மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரியாமல் இந்த சந்திப்பை நடத்தியது எதற்காக? இதுபோன்ற சதித்திட்டங்கள் பற்றி குஜராத் வாக்காளர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்றார்.

    Next Story
    ×