search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன் இருக்கிறது’ - பா.ஜனதா கூட்டணி கட்சி சிவசேனா சொல்கிறது
    X

    ‘ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன் இருக்கிறது’ - பா.ஜனதா கூட்டணி கட்சி சிவசேனா சொல்கிறது

    “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டை வழிநடத்தி செல்கிற திறன் இருக்கிறது. அவரை பப்பு என்று கிண்டல் செய்வது தவறு” என்று பா.ஜனதா கூட்டணி கட்சி சிவசேனா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி., தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், “2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நரேந்திர மோடியின் அலை இருந்தது. ஆனால் இப்போது அது ஓய்ந்து விட்டதாக தோன்றுகிறது. ஜி.எஸ்.டி. வரிமுறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் குஜராத்தில் அதற்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பா.ஜனதா அங்கு சவாலை சந்திக்க போகிறது” என்று கூறினார்,

    அத்துடன், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டை வழிநடத்தி செல்கிற திறன் இருக்கிறது. அவரை பப்பு என்று கிண்டல் செய்வது தவறு” என்றும் கூறினார். (சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர், ராகுலை பப்பு என்று சொல்லி கிண்டல் செய்கின்றனர்.)

    தொடர்ந்து அவர் பேசும்போது, “இந்த நாட்டின் மிகப்பெரிய அரசியல் சக்தி என்றால் அது மக்கள்தான். அதாவது, வாக்காளர்கள்தான்” என்றும் குறிப்பிட்டார்.

    இந்த தொலைக்காட்சி விவாதத்தில், பா.ஜனதா மூத்த தலைவரும், மராட்டிய மாநில கல்வி மந்திரியுமான வினோத் தாவ்டேயும் கலந்து கொண்டிருந்தார்.

    குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடிக்கு எதிராகவும், ராகுலுக்கு ஆதரவாகவும் சிவசேனா கூறியுள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 
    Next Story
    ×