search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 பெண்களை கற்பழித்து கொன்ற வழக்கு: தூக்கு தண்டனை வழக்கில் இருந்து விடுதலையான ‘சயனைடு’ மோகன்
    X

    20 பெண்களை கற்பழித்து கொன்ற வழக்கு: தூக்கு தண்டனை வழக்கில் இருந்து விடுதலையான ‘சயனைடு’ மோகன்

    20 பெண்களை கற்பழித்து கொன்றதாக கைதான ‘சயனைடு’ மோகனை தூக்கு தண்டனை வழக்கு ஒன்றில் இருந்து விடுதலை செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    பெங்களூரு:

    கடந்த 2003–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை மாநிலத்தின் பல்வேறு பஸ் நிலைய கழிவறைகளில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 20 பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். குறிப்பாக மைசூரு லஷ்கர் மொகல்லா பஸ் நிலைய கழிவறையில் 8 பேரின் உடல்களும், பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலைய கழிவறையில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

    இறந்தவர்களின் பெரும்பாலானவர்களின் ரத்தத்தில் ‘சயனைடு‘ கலந்து இருப்பது தெரியவந்தது. இதனால், அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இருந்தாலும், இயற்கைக்கு மாறான சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2009–ம் ஆண்டு ஜூன் மாதம் 16–ந் தேதி பண்ட்வால் பகுதியை சேர்ந்த அனிதா பரிமார் என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் எண் மூலம் மோகன் குமார் (வயது 52) என்பவரை பண்ட்வால் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, நெஞ்சை பதைபதைக்கும் தகவல்கள் வெளியாகின.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மோகன் குமார் 32 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார். இதில் 20 பெண்களை கற்பழித்து கொலை செய்ததற்கான ஆதாரங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு பெண்ணுடனும் வெவ்வேறு பெயர்களில் பேசி அவர்களின் செல்போன் எண்களை மோகன்குமார் வாங்கியுள்ளார்.

    பின்னர், செல்போன் பேச்சால் பெண்களை மயக்கும் அவர், பெண்களை தனியார் ஓட்டல்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்ளும்படி நச்சரிக்கும் பெண்களை அவர் கொலை செய்துள்ளார். அதாவது, பஸ் நிலைய கழிவறைக்குள் பெண்களை அழைத்து சென்று கர்ப்பம் அடையாமல் இருக்க கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்து கொள்ளும்படி அவர் கூறியுள்ளார். அந்த மாத்திரைகளில் ‘சயனைடு‘ தடவி கொடுத்து பெண்களை கொலை செய்து வந்துள்ளார்‘ என்றனர்.

    இதனால் அவர் ‘சயனைடு‘ மோகன் என்று அழைக்கப்பட்டார். கைதான மோகன்குமார் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்தபோது சக பேராசிரியரை கொலை செய்ய முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து போலீசார் மோகன்குமார் அரங்கேற்றிய 32 கொலைக்கான ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினர். இருப்பினும், போலீசாரால் மோகன்குமார் செய்த 20 கொலைக்கான ஆதாரங்களை மட்டுமே திரட்ட முடிந்தது.

    இந்த 20 பெண்களின் கொலைகள் சம்பவம் தனித்தனி வழக்குகளாக மங்களூரு சிறப்பு கீழ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அனிதா பரிமார், லீலாவதி மற்றும் சுனந்தா பூஜாரி ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையில் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21–ந் தேதி நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது, மோகன்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
     
    இந்த நிலையில், தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட 3 வழக்குகளை எதிர்த்து ‘சயனைடு‘ மோகன் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.

    கடந்த 12–ந் தேதி அனிதாவின் வழக்கு சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2005–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லீலாவதி என்ற பெண்ணை தனியார் விடுதியில் வைத்து கற்பழித்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு ‘சயனைடு‘ தடவிய கருகலைப்பு மாத்திரை கொடுத்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதை நீதிபதிகள் ரவி மாலிமத், ஜான் மைக்கேல் குன்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது, லீலாவதியை கற்பழித்து, நகைகளை கொள்ளையடித்து கொன்ற வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கீழ்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த ஐகோர்ட்டு, இந்த வழக்கில் இருந்து ‘சயனைடு‘ மோகனை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் வக்கீல் இன்றி ‘சயனைடு‘ மோகன் தானாகவே வாதாடி கொண்டார். இருப்பினும், வேறு சில வழக்குகளில் ‘சயனைடு‘ மோகனுக்கு ஆயுள் தண்டனைகள் கொடுக்கப்பட்டு உள்ளதால் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×