search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் உதவி: குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி
    X

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் உதவி: குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் பண உதவி வழங்கப்படும் என குஜராத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
    காந்திநகர்:

    குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

    விரைவில் தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரசும், பா.ஜ.க.வும் வாக்காளர்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 4 தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா இந்த தடவை 150 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் 3 தடவை குஜராத் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். நேற்று அவர் ரூ.615 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியும் வாக்குறுதிகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. குஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அகில இந்திய பொதுச்செயலாளர் அசோக்கெலாட், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை நேற்று அறிவித்தார். அவர் கூறியதாவது:-


    குஜராத் முழுவதும் ராகுல் காந்திக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்தப்படி உள்ளது. பல்வேறு சமுதாயத்தின் தலைவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது இதை உறுதிபடுத்துகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பல புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் பண உதவி செய்யப்படும். அவர்களது கல்வி தகுதிக்கு ஏற்ப ரூ.3500 முதல் ரூ.5 ஆயிரம் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை இந்த உதவி தொகை கொடுக்கப்படும்.

    குஜராத்தில் விவசாயிகள் நிலை மிகவும் கொடூரமான முறையில் மோசமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குஜராத் விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை அதிகரித்து வழங்கப்படும்.

    மோடி அரசு செய்த பண மதிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. காரணமாக குஜராத் மாநிலத்தில் சிறு - குறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சமுதாயத்தில் நலிவடைந்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.

    குஜராத்தில் உள்ள ஏழைகளில் பெரும்பாலானவர்களுக்கு வீடு இல்லை. அவர்களுக்கு சொந்தமாக இலவச வீடு கட்டி கொடுக்கப்படும். இது பற்றியெல்லாம் பா.ஜ.க. தலைவர்கள் இன்னமும் கவனம் செலுத்தவில்லை.

    அவர்கள் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசி வருகிறார்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்த கடந்த 3½ ஆண்டுகளில் பா.ஜ.க. எதுவுமே செய்யவில்லை. எனவேதான் பா.ஜ.க. தலைவர்கள் தங்களை பற்றி எதுவும் சொல்ல முடியாமல் உள்ளனர்.

    இவ்வாறு அசோக்கெலாட் கூறினார்.
    Next Story
    ×