search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோலார் பேனல் மோசடி வழக்கு: கேரள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல்காந்தி நேரில் விசாரணை
    X

    சோலார் பேனல் மோசடி வழக்கு: கேரள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல்காந்தி நேரில் விசாரணை

    சோலார் பேனல் மோசடியில் கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கிளம்பி இருக்கும் குற்றச்சாட்டு குறித்து ராகுல்காந்தி நேரில் விசாரணை நடத்துகிறார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது 2-வது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்த மோசடி விவகாரம் வெளியானது. இதில் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அவரது அலுவலக உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி சிவராஜன் தலைமையில் கமி‌ஷன் அமைக்கப்பட்டது.

    இந்த கமி‌ஷன் முன்பு உம்மன்சாண்டி, சரிதாநாயர் உள்பட பலரும் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதன் அடிப்படையில் தயாரித்த அறிக்கையை நீதிபதி சிவராஜன் கடந்த மாதம் இப்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அளித்தார். அந்த அறிக்கையின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    ஆனால் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, அவருக்கு உதவிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது உயர்மட்ட விசாரணை நடத்தப்படுமென முதல்-மந்திரி பினராயி விஜயன், 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

    அவர் மேலும் கூறும்போது, சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதாநாயர் கைதாகி ஜெயிலில் இருந்தபோது, கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந்தேதி கோர்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தன்னை முக்கிய பிரமுகர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அந்த நபர்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறி இருந்தார்.

    பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சரிதாநாயர் பாலியல் புகார் தெரிவித்த நபர்கள் யார்? யார்? இதில் சிக்கும் முக்கிய புள்ளிகள் யார்? என்பது பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் சரிதாநாயர் மலையாள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    சோலார் பேனல் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்த நிலையில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவர், என்னிடம் தவறாக நடந்தார்.

    இவரைபோல காங்கிரஸ் எம்.பி., அப்போதைய மத்திய மந்திரி ஒருவரின் மகன், கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்களின் பெயர் விவரங்களை இப்போது சொல்ல மாட்டேன்.

    ஆனால் இந்த விவரங்களை முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் அளித்த புகாரில் விவரமாக தெரிவித்துள்ளேன். இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் மீது ஊழல் புகார் மட்டுமின்றி பாலியல் குற்றச்சாட்டும் கிளம்பி இருப்பது கட்சியின் மேலிட நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில் கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கிளம்பி இருக்கும் குற்றச்சாட்டு உண்மையானதா? அல்லது எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக கிளப்பி விட்ட கதையா? என்பதை விசாரிக்க கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    இதற்காக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரையும் உடனடியாக டெல்லிக்கு வரும்படி அழைத்துள்ளது. அவர்களிடம் இன்று ராகுல்காந்தி நேரில் விசாரணை நடத்துகிறார்.

    இதற்காக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான ரமேஷ் சென்னிதலா, மாநில காங்கிரஸ் தலைவர் எம்.எம். ஹசன், துணைத்தலைவர் வி.டி. சதீசன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

    இன்று பிற்பகல் இவர்களை கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசுகிறார். முன்னதாக இவர்களுடன் கேரள மாநில பார்வையாளர்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.

    ராகுல்காந்தியுடனான சந்திப்புக்கு பிறகு கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×