search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா: பா.ஜ.க மக்கள் யாத்திரை - அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    X

    கேரளா: பா.ஜ.க மக்கள் யாத்திரை - அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    கேரள மாநிலத்தில் 15 நாட்கள் நடைபெற உள்ள பா.ஜ.க மக்கள் யாத்திரையை, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    தென்மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதையடுத்து அம்மாநிலத்தில் எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானத்திற்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.

    அங்கு மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தது. இந்த யாத்திரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவரும், முதல்-மந்திரியுமான பினராய்விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து இன்று தொடங்கியது.

    இதனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதற்காக இன்று காலையில் அவர் கேரளா வந்தார். அங்கு தளிபரம்புவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சென்று பொன்குடம் காணிக்கை செலுத்தி வழிபட்டார்.

    அதன்பிறகு பையனூர் வந்த அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பையனூரில் நடந்த விழாவில் பேசினார். விழா மேடையில் அரசியல் காரணங்களுக்காக இறந்த கட்சி பிரமுகர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த படங்களுக்கு அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

    அதன்பிறகு மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் முன்னிலையில் மக்கள் யாத்திரையை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையில் மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பாத யாத்திரையாக 15 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறுகிறது.

    அமித்ஷா வருகையையொட்டி கேரளாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐ.ஜி. மதுபால் யாதவ் தலைமையில் 1184 போலீசார் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இதற்கு முன்பு வந்துச்சென்ற எந்த தலைவருக்கும் இந்த அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.

    இந்நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை இந்த யாத்திரையில் கலந்துகொள்வார் என பயனூரில் கட்சியினர் அறிவித்தனர்.
    Next Story
    ×