search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யஷ்வந்த் சின்ஹா சொன்னது தவறு என்றால் நிரூபித்து காட்டுங்கள்: மத்திய அரசுக்கு சிவ சேனா சவால்
    X

    யஷ்வந்த் சின்ஹா சொன்னது தவறு என்றால் நிரூபித்து காட்டுங்கள்: மத்திய அரசுக்கு சிவ சேனா சவால்

    பொருளாதார நிலை குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியது தவறு என்றால் அதை மத்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும் என சிவ சேனா கூறியுள்ளது.
    மும்பை:

    பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் சேர்ந்து இந்திய பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கிவிட்டதாகவும், நாட்டின் பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும் மத்திய முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா கூறினார். மேலும் பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் ரெய்டு நடத்தியிருக்கும் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

    தான் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. அரசு குறித்து யஷ்வந்த் சின்ஹா வெளிப்படையாக குற்றம்சாட்டியது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா கூறிய குற்றச்சாட்டுகள் தவறு என்றால் அதனை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என்று பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் சிவ சேனா கூறியுள்ளது.

    ‘தற்போது பொருளாதார நிலை மோசமாக உள்ளது. யஷ்வந்த் சின்ஹா கூறியது தவறு என்றால், அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் தவறு என நிரூபிக்க வேண்டும். மேலும் பல மூத்த பா.ஜ.க. தலைவர்கள்கூட பொருளாதாரத்தின் தோல்வியுற்ற நிலை குறித்து அதிருப்தியில் உள்ளனர். பேசினால், தங்களுக்கு ஏதாவது ஆபத்து வரலாம் என்று பயப்படுவதால் எதையும் சொல்ல முடியவில்லை.

    மன்மோகன் சிங் மற்றும் பி சிதம்பரம் போன்ற வல்லுநர்கள் பொருளாதாரத்தின் நிலையை வெளிப்படுத்த முயன்றபோது, அவை மூடி மறைக்கப்பட்டன. இப்போது நிதித்துறையை நீண்ட காலம் கவனித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சில விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளார். எனவே, அவர் நேர்மையற்றவர் என்றோ, தேசவிரோதி என்றோ இனி சித்தரிக்கப்படலாம்’ என சிவ சேனா தனது பத்திரிகையான சாம்னாவில் எழுதியுள்ளது.
    Next Story
    ×