search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதியில் அடி, உதை, சித்ரவதை: சுஷ்மா சுவராஜ் உதவியால் தாயகம் திரும்பிய இந்தியர்
    X

    சவுதியில் அடி, உதை, சித்ரவதை: சுஷ்மா சுவராஜ் உதவியால் தாயகம் திரும்பிய இந்தியர்

    வேலை தேடி சவுதி அரேபியா நாட்டுக்கு சென்று உணவு மறுக்கப்பட்டு அடி, உதை, சித்ரவதை, சிறைவாசம் என பல துன்பங்களை அனுபவித்த இந்தியர் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியால் தாயகம் திரும்பினார்.
    புதுடெல்லி:

    வேலை தேடி சவுதி அரேபியா நாட்டுக்கு சென்று உணவு மறுக்கப்பட்டு அடி, உதை, சித்ரவதை, சிறைவாசம் என பல துன்பங்களை அனுபவித்த இந்தியர் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியால் தாயகம் திரும்பினார்.

    திரிபுரா மாநிலத்தின் தெற்கில் உள்ள பெலோனியா அருகே இருக்கும் பர்ப்பத்தாரி கிராமத்தை சேர்ந்த கோபால்(34) என்பவர் மும்பையில் உள்ள ஒரு ஏஜென்சி மூலம் பணம் செலுத்தி, டிரைவர் வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்குள்ள ஒரு நகரில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த கோபாலுக்கு ஆரம்பத்தில் வெகு குறைவான சம்பளமே அளிக்கப்பட்டது.

    சில மாதங்களுக்கு பிறகு அந்த சம்பளத்தையும் தர முதலாளி மறுத்து விட்டார். கோபாலுடன் சென்ற பிஸ்வஜித் என்பவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு வந்த பின்னர், நாள் முழுவதும் காரை ஓட்டும் கோபாலுக்கு சரியாக உணவுகூட அளிக்காததோடு, தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரை அடித்தும், உதைத்தும் சித்ரவதை செய்துள்ளனர்.


    இந்த கொடுமைகளை எல்லாம் திரிபுராவில் இருக்கும் தனது மனைவிக்கு அவர் கைபேசி மூலம் தெரிவித்து வந்ததால் அவரது கைபேசியையும் பறித்து வைத்து கொண்டனர். அதுமட்டும் இல்லாமல் அவர்மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தனர். சிறையிலும் அடி, உதை என சித்ரவதைகளை அனுபவித்த கோபால் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தபிறகு, தங்குவதற்கு இடமில்லாமல் ஒரு கார் ஷெட்டில் அடைக்கலம் அடைந்தார்.

    வேறொருவரிடம் இருந்து கைபேசியை இரவலாக பெற்று தனது துயரநிலையை ஊரில் இருக்கும் மனைவி வபிதாவிடம் தெரிவித்துள்ளார். சிலரது அறிவிரையின்படி உள்ளூரில் உள்ள பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சர்க்கார் என்பவரை சந்தித்த வபிதா, சவுதி அரேபியாவில் தனது கணவர் சிக்கித்தவிக்கும் அவலநிலையை கூறி, அவரை இந்தியாவுக்கு அழைத்துவர உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

    பெலோனியாவில் உள்ள பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் ரசேல் சின்ஹா என்பவருக்கு இந்த தகவல் போய் சேர்ந்தது. உடனடியாக, சவுதியில் உள்ள கோபாலை கைபேசி மூலமாக தொடர்புகொண்ட ரசேல் சின்ஹா, அங்கு அவர் அனுபவித்துவரும் துயரங்களை வீடியோவாக பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். கோபாலும் தான் தங்கியிருக்கும் சூழலை வீடியோவாக பதிவுசெய்து அனுப்பி வைத்தார்.

    அந்த வீடியோ காட்சிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை டுவிட்டர் மூலம் தொடர்புகொண்ட ரசேல் சின்ஹா, கோபாலை இந்தியாவுக்கு அழைத்துவர உதவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். சவுதி அரேபியாவில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கோபால் இருப்பதை அறிந்த சுஷ்மா சுவராஜ், ரியாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு கோபாலை அனுப்பிவைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


    இதையடுத்து, அடுத்த மூன்று நாட்களில் அவர் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் விரைவாக செய்யப்பட்டன. சுஷ்மாவின் பெருமுயற்சியின் பலனாக கோபால் திரிபுரா வந்து சேர்ந்தார். சவுதியில் இருந்து நேற்று மாலை அகர்தலா விமான நிலையம் வந்தடைந்த கோபாலை திரிபுரா மாநில பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் மற்றும் கோபாலின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அன்புடன் வரவேற்றனர்.
    Next Story
    ×