search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியை அழகுபடுத்த அதிகாரிகளுடன் சந்திரபாபுநாயுடு ஆலோசனை
    X

    திருப்பதியை அழகுபடுத்த அதிகாரிகளுடன் சந்திரபாபுநாயுடு ஆலோசனை

    திருப்பதியை சுற்றி உள்ள ஏரிகளை தூர்வாரி அழகுபடுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
    திருமலை:

    ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு மந்திரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் திருமலைக்கு வந்தபோது, தரிசன ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததாக பாராட்டினார். திருமலையில் செய்து வரும் ஆன்மிக பணிகளைபோல் நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் மேற்கொள்வது தொடர்பாக ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

    திருப்பதி நகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. நகரை அழகுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மல்லிமடுகு நீர்த்தேக்கம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த நீர்த்தேக்கத்தில் இருந்து திருப்பதி நகருக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

    மேலும் திருப்பதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க, கபிலத்தீர்த்தம் நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரை மலைப்பகுதியிலேயே ஒரு நீர்த்தேக்கத்தை கட்டி தண்ணீரை தேக்கி, அங்கிருந்து திருப்பதியில் உள்ள பல ஏரிகளுக்கு திருப்பி விட புதிதாக கால்வாய்களை அமைக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பதி, சித்தூர், குப்பம் ஆகிய நகரங்களில் நடந்து வரும் அரசு வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வரும் காலங்களில் மேற்கண்ட 3 நகரங்களும் அழகாக இருக்க வேண்டும். அந்த நகரங்களில் தொழிற்சாலைகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகள், தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மேற்கண்ட நகரங்களில் முதல் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளை தொடங்கலாம்.

    மேற்கண்ட 3 நகரங்களும் ஸ்ரீசிட்டியை போல் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதியில் வைகுந்த மாலா என்ற பெயரில் சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். திருப்பதியில் இருந்து ரேணிகுண்டா, ஸ்ரீகாளஹஸ்தி பகுதிகளுக்குச் செல்லும் சாலையை சீரமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். சாலை ஓரம் பல தொழிற்சாலைகளை தொடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேணிகுண்டா பகுதியில் ஏற்கனவே ஐ.டி.பார்க் மற்றும் பல தொழிற்சாலைகள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதியில் சர்வதேச தரத்தில் அறிவியல் மையத்துக்கான கட்டிடம் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். திருப்பதியை சுற்றி உள்ள ஏரிகளை தூர்வாரி அழகுபடுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

    இவ்வாறு சந்திரபாபுநாயுடு பேசினார்.
    Next Story
    ×