search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மதிப்பு இழப்பு திட்டம் தோல்வி: மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்
    X

    பண மதிப்பு இழப்பு திட்டம் தோல்வி: மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்

    நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடியின் திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு குழப்ப நிலை நிலவியது.

    கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டை ஒழிக்கவும் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அப்போது கூறினார்.

    செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டன. அந்த நேரத்தில் ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி அளவுக்கு ரூ.1000, ரூ.500 நோட்டுகள் வெளியில் புழக்கத்தில் இருந்தன. அந்த பணங்கள் எல்லாம் திரும்பி வங்கிக்கு வந்தன.


    அதன்படி 99 சதவீத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்து விட்டதாக தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு சதவீத ரூபாய் நோட்டு மட்டும் வரவில்லை.

    இதன்படி பார்த்தால் ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடியில் வெறும் ரூ.16 ஆயிரம் கோடி மட்டுமே திரும்பி வராமல் உள்ளது.

    எனவே, கள்ள நோட்டு மற்றும் கறுப்பு பணம் ரூ.16 ஆயிரம் கோடி மட்டும்தான் ஒழிக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலா கூறியதாவது:-

    பண மதிப்பு இழப்பு திட்டம் கொண்டு வந்ததின் மூலம் ரூ.3 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டு விட்டதாக சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

    ஆனால், ரிசர்வ் வங்கி ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி பணப்புழக்கம் இருந்ததில் ரூ.16 ஆயிரம் கோடி மட்டுமே திரும்ப வரவில்லை என்று கூறி உள்ளது. மேலும் ரூ.9 ஆயிரம் கோடி பல்வேறு வகையில் சிக்கி இருக்கலாம். உண்மை நிலை என்ன என்பதை ரிசர்வ் வங்கி கூறி விட்டது.

    இந்த திட்டம் தோல்வி அடைந்ததற்காகவும், தவறான தகவலை கூறியதற்காகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:-

    ஊழலை ஒழிப்பதற்காகவும், கறுப்பு பணம், கள்ள நோட்டை ஒழிப்பதற்காகவும், தீவிரவாதிகளிடம் பணம் செல்வதை தடுப்பதற்காகவும் ரூபாய் நோட்டை பண மதிப்பு இழப்பு செய்வதாக அறிவித்தார்கள்.


    ஆனால், இன்று 99.9 சதவீத பணம் திரும்பி வந்து விட்டது. பணம் எடுக்க ‘கியூ’வில் நின்று 100 பேர் உயிர் இழந்தனர். ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் நாசமானது. பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். மோடி அரசு செய்த இந்த தேச விரோத செயலை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்த திட்டம் முற்றிலும் தோல்வி அடைந்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    மேற்கு வங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கூறும் போது, இந்த திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறினார்கள். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. பெரிய பூஜ்ஜியம்தான் கிடைத்து இருக்கிறது என்று கூறினார்.

    Next Story
    ×