search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானா, பஞ்சாப் வன்முறை: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி உறுதி
    X

    அரியானா, பஞ்சாப் வன்முறை: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி உறுதி

    சாமியார் குர்மீத் சிங் தண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி குறிப்பிடுள்ளார்.
    புதுடெல்லி:

    இளம் பெண்களை கற்பழித்த வழக்கில் அரியானாவை சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. கோர்ட் கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கான சிறை தண்டனை தொடர்பாக நாளை (28-ம் தேதி) தீர்ப்பு அளிக்கப்படுகிறது.



    சாமியார் குர்மீத் சிங் தண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையில் முப்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். நாளை தண்டனை விபரம் வெளியாகும்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என அஞ்சப்படுகிறது.



    அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் தலைமை மடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக மக்களிடையே உரையாற்றும் பிரதமர் மோடி, இன்றைய உரையின்போது கூறியதாவது:-

    நாடு முழுவதும் பண்டிகை தொடர்பான விழா கொண்டாட்டங்களுக்காக தயாராகிவரும் நிலையில் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் வன்முறை தொடர்பான செய்திகள் கவலைக்குரியதாக உள்ளது.

    புத்தர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை ஒருமைப்பாட்டுக்காக அர்ப்பணித்துகொண்ட நமது நாட்டில் காலகாலமாக அகிம்சை முறைதான் நாட்டின் அடித்தளமாக இருந்து வந்துள்ளது.

    (சுதந்திர தின உரையின்போது) செங்கோட்டையில் பேசியபோது, நம்பிக்கையின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை எக்காரணத்தை கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். அது மத நம்பிக்கையானாலும், அரசியல் நம்பிக்கையானாலும், அல்லது தனிநபர் மற்றும் பாரம்பரியம் சார்புடைய நம்பிக்கையானாலும் சரி.., நம்பிக்கை என்ற பெயரால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது.

    யார் வேண்டுமானாலும் தங்களது கையில் சட்டத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எந்த நாடும், எந்த அரசாங்கமும் சகித்துக் கொள்ளாது என்பதை நாட்டு மக்களுக்கு நான் உறுதிப்பட தெரிவித்து கொள்கிறேன். சட்டத்தின் முன்னர் அனைவரும் தலைவணங்கியே தீர வேண்டும். வன்முறைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டம் தனது கடமையை செய்யும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×