search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில் நிதியை தர்ம காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: ஐதராபாத் ஐகோர்ட்டு
    X

    திருப்பதி கோவில் நிதியை தர்ம காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: ஐதராபாத் ஐகோர்ட்டு

    திருப்பதி கோவில் நிதியை தர்ம காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    திருமலை:

    திருப்பதி நகரை அழகுபடுத்த, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ரூ.10 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரியும், பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, அதாவது திருமலை-திருப்பதி தேவஸ்தான நிதியை பொது காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது எனக் கோரி திருப்பதியைச் சேர்ந்த வி.நவீன்குமார்ரெட்டி என்பவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காலூர் கிராஸ் வரை திருப்பதி நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில் (துடா), திருப்பதியை அழகுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருப்பதியை அழகுபடுத்தும் திட்டத்தில் சாலைகள் அமைத்தல், பூங்காவை உருவாக்கி பராமரித்தல், சாலைகள் ஓரம் இரு புறமும் பூஞ்செடிகள் நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்கு திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நிதி வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் காணிக்கை பணத்தில் பொது காரியங்களை மேற்கொள்ளக்கூடாது.

    திருமலை- திருப்பதி தேவஸ்தானம் அதற்கு நிதி வழங்கக்கூடாது. திருப்பதி நகர மேம்பாட்டு ஆணையத்தின் நிதி மூலமே மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஐகோர்ட்டு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் அவர் கூறி உள்ளார்.

    அந்த மனுவை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எந்த நிபந்தனையோடு திருப்பதி நகரை அழகுபடுத்த நிதி வழங்க உள்ளது என்ற விவரத்தை அறநிலையத்துறை, ஐகோர்ட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். திருமலை-திருப்பதி தேவஸ்தான நிதியை தர்ம காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியார் வளர்ச்சிப்பணி, துடா வளர்ச்சிப்பணி, சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் உருவாக்குதல், ஏரிகள் தூர்வாருதல் ஆகிய பணிகளுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான நிதியை பயன்படுத்தக்கூடாது.

    ஏழுமலையான் கோவில் நிதியை பொது காரியங்களுக்கு எப்படி பயன்படுத்துகிறீர்கள்? என ஐகோர்ட்டு, ஆந்திர அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. அரசு நிதியை மட்டுமே பொது காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இதற்கு 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசு, திருமலை-திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி நகர மேம்பாட்டு ஆணையம் (துடா) ஆகியவற்றுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×