search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடஒதுக்கீடு கேட்டு மராத்தியர்கள் போராட்டம் - மும்பை நகரம் ஸ்தம்பித்தது
    X

    இடஒதுக்கீடு கேட்டு மராத்தியர்கள் போராட்டம் - மும்பை நகரம் ஸ்தம்பித்தது

    மராட்டியம் மாநிலத்தில் பரவலாக வாழ்ந்து வரும் மராத்தி இன மக்கள் தங்களுக்குரிய இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்று நடத்திய மாபெரும் பேரணியால் மும்பை நகரம் ஸ்தம்பித்தது.
    மும்பை:

    மராட்டியம் மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 32 சதவிகிதம் மராத்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். வரலாற்று பெருமை மிக்க மன்னர் வீர சிவாஜியின் வம்சாவளியினராக அறியப்படும் இவர்கள் தங்களை
    சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்து மத்திய மாநில அரசுகள் அளித்து வரும் கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு மற்றும் இதர மானிய சலுகைகள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என கோரி பலமுறை, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில், மீண்டும் இதே கோரிக்கைகள் தொடர்பாக மராத்தா கிராந்தி மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் இன்று பல்லாயிரக்கணக்கான மராத்தியர்கள் மாநில தலைநகர் மும்பையில் உள்ள பைகுலா பகுதியில் தொடங்கி மாபெரும் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர்.

    இது தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வசிக்கும் மராத்தியர்கள் இதேபோல பேரணி நடத்தி வருகின்றனர்.



     தங்களது நிறைவேற்றப்படாத தங்களது பழைய கோரிக்கைகளுடன், கடந்தாண்டு கோபார்டி பகுதியில் கற்பழித்து கொல்லப்பட்ட தங்களது இனத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்கத் தவறிய அரசை எதிர்த்து இன்றைய பேரணி நடத்தப்படுவதாக மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவர்களுக்கு ஆதரவாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மராட்டிய சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டசபை வளாகத்தில் அமர்ந்து அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு தர்ணா போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

    மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பினர் இன்று நடத்திய பேரணியால் மும்பை நகரின் பல முக்கிய சாலைகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. போக்குவரத்து நெரிசலால் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    Next Story
    ×