search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாராக்கடன்களை வசூலிக்க மசோதா: பாராளுமன்றத்தில் நிறைவேறியது
    X

    வாராக்கடன்களை வசூலிக்க மசோதா: பாராளுமன்றத்தில் நிறைவேறியது

    வாராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிப்பதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேறியது. சிட்பண்ட் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும் மசோதா கொண்டுவரப்படும் என்று அருண் ஜெட்லி கூறினார்.
    புதுடெல்லி:

    வாராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிப்பதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேறியது. சிட்பண்ட் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும் மசோதா கொண்டுவரப்படும் என்று அருண் ஜெட்லி கூறினார்.

    பொதுத்துறை வங்கிகளில், கடனை திரும்பச் செலுத்தாதவர்களால், வாராக்கடன்கள் அளவு அதிகரித்து வருகிறது. அத்தகைய கடன்களை வசூலிப்பதற்காக, கடந்த மே மாதம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது பாராளுமன்ற கூட்டம் நடந்து வருவதால், அந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1949-ம் ஆண்டின் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக, வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த மசோதா என்ற பெயரில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    வாராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. இதன்படி, கடனை திரும்ப செலுத்தாதவர்களிடம் இருந்து அதை வசூலிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிடலாம். தேவையான இதர உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம்.

    வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகளையோ அல்லது கமிட்டிகளையோ நியமிக்கலாம்.

    இந்த மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச பொருளாதார மந்த நிலைக்கு முன்பே பொதுத்துறை வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்தன. அதனால், 2001-2002-ம் நிதிஆண்டில், வாராக்கடன் அளவு 13.11 சதவீதமாக இருந்தது. 2007-2008-ம் நிதிஆண்டில் 2.1 சதவீதமாக குறைந்தது. பொருளாதார மந்தநிலைக்கு பிறகு மீண்டும் அதிகரித்தது.

    தற்போது, ஏற்றுக்கொள்ள முடியாத உச்சநிலையை அடைந்துள்ளதால், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

    எனவே, வாராக்கடன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வரப்போவதை பார்க்கப்போகிறோம். ரிசர்வ் வங்கி மீது நம்பிக்கை வையுங்கள். அதிக கடன் பாக்கி வைத்துள்ள 12 நிறுவனங்களை ரிசர்வ் வங்கி ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.

    வாராக்கடன் பிரச்சினைக்கு காங்கிரஸ் மீது பழியை சுமத்துவது எனது நோக்கம் அல்ல.

    சிட்பண்ட் நிறுவனங்கள், வங்கிகளை விட ஒன்று, இரண்டு சதவீதம் அதிக வட்டி தருவதாக சொல்லி, முதலீட்டாளர்களை கவர்ந்து வருகின்றன. அதன்மூலம், அவர்களின் பணத்துடன் விளையாடி வருகின்றன. எனவே, சிட்பண்ட் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த விரைவில் மசோதா கொண்டுவரப்படும்.

    ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படும் சிட்பண்ட் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த அந்தந்த மாநில அரசுகளே மசோதா கொண்டு வரலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் சிட்பண்ட் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு மசோதா கொண்டுவரும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

    பின்னர், இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. 
    Next Story
    ×