search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 30 வருடத்தில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை - ஆய்வில் தகவல்
    X

    பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 30 வருடத்தில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை - ஆய்வில் தகவல்

    இந்தியாவில் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த முப்பது வருடத்தில் சுமார் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

    கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அந்த அய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

    அந்த ஆய்வின் முடிவுகளின்படி, பருவநிலை மாற்றங்களால் வளரும் நாடுகளில் அதிக அளவிலான தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐந்தில் ஒரு சம்பவம் இந்தியாவில் நடைபெறுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 30 வருடத்தில் 59,000 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. அறுவடை தவறுவதால் விவசாயிகள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவதே தற்கொலைக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

    பயிர்கள் வளரும் பருவத்தில் 20 டிகிரி செல்சியஸிற்கு மேல் இருக்கும் சராசரி வெப்பநிலை, ஒரு நாளுக்கு ஒரு டிகிரி உயர்வதால் கூட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. 20 டிகிரிக்கு மேல் எப்போதெல்லாம் ஒரு டிகிரி உயர்கிறதோ அப்போது,  நாடு முழுவதும் சுமார் 65 விவசாயிகள் தற்கொலைக்கு காரணமாகிறது. அதுவே ஐந்து டிகிரி செல்சியஸிற்கு மேல் அதிகரித்தால் அது ஐந்து மடங்கிற்கும் அதிகமான விளைவுகள் ஏற்படுத்துகிறது. 

    பயிர் விளையும் பருவத்தில் மட்டும் தான் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதாகவும் மற்ற நேரங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    அதிகரித்துவரும் வெப்பநிலைக் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கும் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலைகளை தடுப்பதற்காக இந்திய அரசு சுமார் 1.3 பில்லியன் டாலர் அளவிற்கு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது பற்றி தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் அதிர்ச்சியானதாக இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  
    Next Story
    ×