search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகருடன் மோதல்: எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி
    X

    சபாநாயகருடன் மோதல்: எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி

    பாராளுமன்றத்தில் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்படாததைக் கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சஹரன்பூர் தலித் இன மக்களுக்கு எதிராக சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இன்று காலை பாராளுமன்ற மேல்சபையில் பிரச்சனை எழுப்பினார்.

    இவ்விவகாரம் தொடர்பாக அவையில் தனது கருத்தை பதிவு செய்ய சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் என்று மாயாவதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு மூன்று நிமிடம் நேரம் ஒதுக்குவதாக துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் தெரிவித்தார். தலித் இன மக்கள் மீதான தாக்குதல் மற்றும் அடக்குமுறைகள் குறித்து தெரிவித்த அவர் 3 நிமிடத்தைத் தாண்டி பேசினார். அப்போது துணை சபாநாயகர் பி.ஜே.குரியன், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என சுட்டிக் காட்டினார்.

    இதனால், ஆவேசம் அடைந்த மாயாவதி,  ‘நான் இன்னும் பேசி முடிக்கவில்லை. இடையில் நீங்கள் இதைப்போல் குறுக்கீடு செய்ய கூடாது. எங்கள் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக எனது கருத்தை பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டால் இந்த அவையில் நான் உறுப்பினராக தொடர்வதில் அர்த்தமில்லை’ என்று ஆவேசமாக கூறினார்.

    இதை கேட்டதும் தனது ஆசனத்தில் இருந்து எழுந்த துணை சபாநாயகர் பி.ஜே. குரியன், மாயாவதியை சமாதானப்படுத்த முயன்றார். இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றால், பாராளுமன்ற விதிமுறைகளின்படி முன்கூட்டியே ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

    இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த மாயாவதி, தனது இருக்கையை விட்டு ஆவேசமாக எழுந்து ‘எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்யப் போகிறேன் என்று சப்தமாக கூறியவாறு அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து இதர சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி. இன்று மாலை மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். 
    Next Story
    ×