search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகேஷ் சந்திரசேகரிடம் எம்.பி.க்கான போலி அடையாள அட்டை பறிமுதல்
    X

    சுகேஷ் சந்திரசேகரிடம் எம்.பி.க்கான போலி அடையாள அட்டை பறிமுதல்

    இரட்டை இலை சின்னம் பெற்று தருவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.க்கான போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா, நரேஷ் ஆகியோருக்கு தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால் அவர்கள் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டு கைதான சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தனிக்கோர்ட்டு நீதிபதி இருமுறை தள்ளுபடி செய்துள்ளார்.

    ஏப்ரல் வாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தியபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சம், இரு சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காரில் எம்.பி.க்கான கார் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு இருந்ததையும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.



    தற்போது சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.க்கான போலி அடையாள அட்டையை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து அவர் மீது பாதுகாப்பு தொடர்பான போலி ஆவணங்கள் தயாரித்தல் தொடர்பான மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இந்த பிரிவின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் கூறினர். போலி அடையாள அட்டை, உண்மையான அடையாள அட்டை போல இருப்பதாகவும், இதனை அவர் பெற்றது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் செயலை செய்துள்ள சுகேஷ், போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பாராளுமன்ற வளாகத்துக்குள் சென்று வந்தாரா? என்பது பற்றியும் விசாரித்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×