search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம்: பாகிஸ்தானில் தவித்த இந்திய பெண் உஸ்மா நாடு திரும்பினார்
    X

    துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம்: பாகிஸ்தானில் தவித்த இந்திய பெண் உஸ்மா நாடு திரும்பினார்

    பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம் செய்து வைக்கப்பட்டதால் வெளியேற முடியாமல் தவித்த இந்திய பெண் உஸ்மா, கோர்ட் அனுமதி கிடைத்ததும் இன்று நாடு திரும்பினார்.
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா (வயது 20). பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்தவர் தாகிர் அலி. இருவரும் மலேசியாவில் சந்தித்தபோது, காதல் வயப்பட்டனர். இதையடுத்து, கடந்த 1–ந் தேதி, உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். பாகிஸ்தானில் கடந்த 3–ந் தேதி, தாகிர் அலிக்கும், அவருக்கும் திருமணம் நடந்தது.

    பின்னர் 5–ந் தேதி உஸ்மா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தாகிர் அலி தூதரகத்தை அணுகிய போது, உஸ்மா இந்தியாவுக்கு திரும்பி செல்ல விரும்புவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

    இதனையடுத்து தாகிர் அலிக்கு எதிராக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் உஸ்மா புகார் மனு கொடுத்தார். மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலமும் அளித்தார். தாகிர் அலி ஏற்கனவே திருமணமாகி, 4 குழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டார் என்றும், துப்பாக்கி முனையில் மிரட்டி வலுக்கட்டாயமாக தன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் உஸ்மா  கூறினார்.

    இவ்வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட், இளம் பெண் உஸ்மாவை இந்தியா அனுப்ப நேற்று அனுமதி அளித்தது. அத்துடன், வாகா எல்லை உஸ்மா செல்லும் போது அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் போலீசாருக்கு வலியுறுத்தியது.

    இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட உஸ்மா, அட்டாரி - வாகா எல்லையின் வழியாக இன்று இந்தியாவிற்கு வந்தார். போலீஸ் பாதுகாப்புடன் வந்த அவர், எல்லையில் இந்திய மண்ணை தொட்டு கும்பிட்ட பிறகே இந்தியாவிற்குள் நுழைந்தார். வாகா எல்லையின் இந்திய பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் உஸ்மாவை வரவேற்றனர்.

    நாங்கள் எதிர்பார்த்ததை விடவும், அரசு எங்களுக்கு உதவி செய்துள்ளது என உஸ்மாவின் சகோதரர் வாசிம் அகமது கூறியுள்ளார். மேலும் உஸ்மாவை இந்திய தூதரகம் முழு கவனத்துடன் பார்த்துக்கொண்டது என்றும், உஸ்மா நாடு திரும்ப உதவி செய்த வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் வாசிம் அகமது கூறினார்.

    அதேசமயம், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உஸ்மாவை வரவேற்று டுவிட் செய்துள்ளார். அவர் எதிர்கொண்ட கஷ்டங்களுக்கு வருந்துவதாகவும் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×