search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்கல்வியில் உலக அளவில் இந்தியா மிகச்சிறந்த நாடாக திகழ்கிறது: கவர்னர் பன்வாரிலால் புரோகித்
    X

    உயர்கல்வியில் உலக அளவில் இந்தியா மிகச்சிறந்த நாடாக திகழ்கிறது: கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    சுதந்திரத்திற்கு பின்பு உலக அளவில் உயர்கல்வியில் மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது என்று சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்திய தேசிய சமூக அறிவியல் மாநாட்டை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சுதந்திரத்திற்கு பின்பு உலக அளவில் உயர்கல்வியில் மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. வருங்காலங்களில் உயர்கல்வியில் நிறைய முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இனி வரும் காலத்தில் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் தேவைப்படுகிறது.

    அவற்றை நிறைவேற்றி தந்தால்தான் எதிர்காலத்தில் போட்டிகளையும், சவால்களையும் சந்திக்க உதவியாக இருக்கும். வேலைவாய்ப்பையும் பெற முடியும். நமது நாட்டு இளைளஞர்களுக்கு வறுமை ஒழிப்பு குறித்தும், ஜனநாயக விரோத செயல்களை தடுப்பது குறித்தும், சமூக நீதி குறித்தும் கருத்து சுதந்திரம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும்.

    நல்ல கல்வி நிலையங்களை உருவாக்கும் நேரம் வந்து விட்டது. ஆராய்ச்சி, மனித வளம் இருக்கும் வகையில் மேலும் நவீன வசதிகளுடன் கல்வி நிலையங்களை உருவாக்கும் நேரம் வந்து விட்டது. கல்வி என்பது திறந்த நிலையாக இருக்க வேண்டும். எதிர்கால சவால்களை சமாளிக்கக்கூடிய வகையிலும், எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையிலும் அது உதவியாக இருக்க வேண்டும்.

    பொருளாதார முன்னேற்றம், உலக மயமாக்கல் ஆகியவற்றை எடுத்து செல்லும் வகையில் கல்வி இருக்க வேண்டும். மனிதவள மேம்பாட்டிற்கு தமிழ்நாடு முக்கியத்துவம் கொடுத்து வருவதுகுறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் 800 பல்கலைக் கழகங்கள் உள்ளன. 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. 3.4 கோடி மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரியார் பல்கலைக்கழகம் நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் 85-வது இடத்தில் உள்ளது. இது பெருமைப்படவேண்டிய வி‌ஷயமாகும்.

    தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 24 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த 24 பல்கலைக்கழகங்களும் முதல் 100 இடங்களுக்குள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள 40 ஆயிரம் கல்லூரிகளில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் உள்ள 37 கல்லூரிகள் இடம் பெற்று உள்ளன. அதுவும் பெருமைப்படக் கூடிய வி‌ஷயமாகும். நல்ல உயர்கல்வி இருந்தால்தான் எந்த நாட்டிலும் மனிதவள மேம்பாடு நன்றாக இருக்கும். மனித வள மேம்பாடு இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சி அடையும். உலக அளவில் பல முன்னேற்றங்களை சாதிக்கலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மனித வள மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்தால் தான் இந்தியா மேலும் வளமான நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டு மலரையும் கவர்னர் பன்வாரிலால்புரோகித் வெளியிட்டார்.

    மாநாட்டிற்கு இந்திய சமூக அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எஸ். சர்மா தலைமை தாங்கினார்.

    உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் வரவேற்றார். இந்திய சமூக அறிவியல் அமைப்பின் செய லாளர் டாக்டர் என்.பி.சவுபே உதவி தலைவர் கல்பனா கண்ணபிரான், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன் உள்படபலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சேலம் வட்டார அமைப்பு செயலாளர் டாக்டர் ஏ.இளங்கோவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×