search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலாறு - பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் முற்றுகை
    X

    பாலாறு - பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் முற்றுகை

    பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பழனி:

    பழனி பாலாறு- பொருந்தலாறு அணை நீர்பாசன அமைப்பின் தலைவர் திருவேங்கடசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதையடுத்து விவசாயிகள் சார்பில் சிலர் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டனர். நீர்பாசன அமைப்பின் நிர்வாகிகள் சிலருடன், பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் மெய்யழகன், உதவி பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது:-

    பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து இடது பிரதான கால்வாய்க்கு ஆண்டுதோறும் தண்ணீர் திறக்கப்படும். இந்த கால்வாய் மூலம் நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 9 ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்மட்டம் 55 அடிக்கு மேல் செல்லும் போது பாசனத்துக்காக இடது பிரதான கால்வாயில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது அணையில் 62 அடி வரை தண்ணீர் உள்ளது.

    ஆனால் இதுவரை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப் பட்டுள்ள பயிர்களும் கருகி வருகின்றன. மேலும் இடது பிரதான கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது, கால்வாயின் கடைசி பகுதி வரை தண்ணீர் வராது. எனவே கால்வாயை விரைவில் தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையடுத்து பேசிய அதிகாரிகள், பாலாறு- பொருந்தலாறு அணையின் இடது பிரதான கால்வாய் தூர்வாரும் பணிக்கு தேவையான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    அணையில் இருந்து 50 நாட்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மேல் தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    இதில் சமாதானமடையாத விவசாயிகள் மீண்டும் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×