search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட கவர்னர்
    X

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட கவர்னர்

    கன்னியாகுமரி வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார். பின்னர் விவேகானந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கன்னியாகுமரி:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி வந்தார். பின்னர், அவர் கன்னியாகுமரி புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    அவர், நேற்று காலை 6.35 மணிக்கு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

    அவர், அம்மனை தரிசனம் செய்தபின் கோவிலில் உள்ள காலபைரவர், ஆஞ்சநேயர், தியாக சவுந்தரி அம்மன், இந்திரகாந்த விநாயகர், பாலசவுந்தரி அம்மன், தர்ம சாஸ்தா ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

    பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு காலை 7.15 மணிக்கு வந்தார்.

    அங்கு அவர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, ஆதிமூலவர் கொன்றையடி தாணுமாலயசாமி, நவகிரக வசந்த மண்டப நீலகண்ட விநாயகர், தாணுமாலயர், காலபைரவர், 18 அடி உயர ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக தாணுமாலய சன்னதிக்கு செல்லும் வழியில் அலங்கார மண்டபத்தில் உள்ள இசை தூண்களை கோவில் ஊழியர் ஒருவர், ‘ச ரி க ம ப த நி ச’ என்ற சுரங்களுக்கு ஏற்ப இசைத்து காட்டினார்.

    கருங்கற்களால் ஆன இசைத்தூண்களில் இருந்து கோவில் ஊழியர் கைகளால் தட்டிய தாளத்திற்கேற்ப இசை ஒலி எழும்பியதை கேட்டு கவர்னர் வியப்பில் ஆழ்ந்தார்.

    பின்னர், மதியம் 1.30 மணிக்கு மீண்டும் கன்னியாகுமரி வந்த அவர், விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கு சென்றார். அங்கு கவர்னரை, கேந்திர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பானுதாஸ், நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவி பாபு, வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆகியோர் வரவேற்றனர்.

    அதன்பிறகு கவர்னர் விவேகானந்த மண்டபத்தை நிறுவிய ஏக்நாத் ரானடேயின் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்குள்ள விவேகானந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ராமாயண சித்திர கண்காட்சி கூடம், பாரதமாதா சதனம் ஆகியவற்றை பார்வையிட்டார். அங்கு அவரை கேந்திர நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீபத்ம நாதன் ஆகியோர் வரவேற்றனர்.

    அதைதொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகுத்துறைக்கு வந்தார். தனி படகில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்துக்கு சென்று பகவதி அம்மன் கால்தடம் பார்த்து வணங்கினார். பின்னர், விவேகாந்தர் மண்டபத்தில் உள்ள சபா மண்டபத்துக்கு சென்று அங்குள்ள ராமகிருஷ்ணபரமஹம்சர் மற்றும் அவரது துணைவியார் அன்னை சாரதா தேவியின் உருவ படத்துக்கு முன்பு நின்று வணங்கினார். தொடர்ந்து தியான மண்டபத்தில் தியானம் செய்தார்.

    பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகத்திற்கு வந்த அவரை மேலாளர் சிவசூரியன், குமரி மாவட்ட சுற்றலா அதிகாரி நெல்சன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் ஜாக்சன் வில்லியம் ஆகியோர் வரவேற்றனர். விவேகானந்தர் பாறைக்கு சென்ற கவர்னரை பாறை நினைவாலய பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    Next Story
    ×