search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராம மக்கள் பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
    X
    கிராம மக்கள் பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

    கச்சிராயப்பாளையம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்: 2 பஸ்கள் சிறைப்பிடிப்பு

    இலவச ஆடு வழங்குவதில் முறைகேட்டை கண்டித்து கச்சிராயப்பாளையம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கச்சிராயப்பாளையம்:

    கச்சிராயப்பாளையம் அருகே உள்ள க.அலம்பலம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் அரசின் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து க.அலம்பலம் கிராம மக்கள் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே கச்சிராயப்பாளையம்-கள்ளக்குறிச்சி சாலையில் இன்று காலை திரண்டனர். அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். முறைகேடுகள் இல்லாமல் விலையில்லா ஆடுகள் வழங்க வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    சிறைப்பிடிக்கப்பட்ட பஸ்களையும் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×