search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு உரிமைகளை அடகு வைத்து விட்டது: சீமான் பாய்ச்சல்
    X

    தமிழக அரசு உரிமைகளை அடகு வைத்து விட்டது: சீமான் பாய்ச்சல்

    உரிமைகள் மற்றும் நலன்களை தமிழக அரசு மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தமிழக நலன்கள் அனைத்தையும் புறக்கணிக்கும் வகையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ மக்களின் நலனுக்காகவே மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறுகிறது.

    தமிழகத்துக்கு இதனால் என்ன நன்மை கிடைத்துள்ளது. நீட் தேர்வு விவகாரம், ஜல்லிக்கட்டு பிரச்சினை, உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட வி‌ஷயங்களில் நமது உரிமைகளை இழந்துள்ளோம். ஜி.எஸ்.டி. வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.



    கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அதிகாரங்களையும் நம்மிடம் இருந்து மத்திய அரசு பறித்துக் கொண்டது. தற்போது விவசாய துறையிலும் நமது உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    இப்படி தமிழக நலன் சார்ந்த அனைத்து வி‌ஷயங்களிலும் தமிழர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசுடன் இன்னும் இணக்கமாக இருந்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது.

    மாநில சுயாட்சி என்பது வெறும் பேச்சாகவே உள்ளது. தமிழக வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஆளுனர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு ஆளுனர் எதற்கு என்று கூறியவர்கள் தானே இவர்கள்.

    தற்போது தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக உரிமைகளும், நலன்களும் மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டு விட்டன.



    கோவையில் பாலித்தீன் கவர்களை கீழே போட்டு அதனை கூட்டி அள்ளி சுகாதார பணியை கவர்னர் மேற்கொண்டதாக கூறுகிறார்கள். எத்தனையோ இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன. அங்கு போய் ஆய்வு செய்தால் என்ன?

    மழை வெள்ளம் வந்த போது வெள்ளப் பாதிப்பு குறித்து கவர்னர் அங்கு போய் ஆய்வு செய்து இருக்கலாமே. பின்னர் அந்த பாதிப்புகளை மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்பி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை.

    இப்படி மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் கவர்னர் தலையிடுவது போல மத்திய அரசின் நடவடிக்கைகளில் ஜனாதிபதி தலையிட்டால் மோடி பார்த்து கொண்டிருப்பாரா?

    தமிழக அரசியல் கட்சிகளில் அ.தி.மு.க. இப்போது இல்லை என்றுதான் கூற வேண்டும். அழிவின் விளம்பில் அக்கட்சி உள்ளது. பா.ஜனதாவின் நடவடிக்கைகளால் அ.தி.மு.க. மேலும் சரிவை சந்திக்கும்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையும் ஏற்படும். சின்னத்தை பார்த்து மக்கள் ஓட்டளிக்கும் காலம் மாறி வருகிறது.



    நல்ல வி‌ஷயங்களை யார் செய்தாலும் அவர்களுக்கு ஓட்டு போடும் மன நிலையிலேயே மக்கள் உள்ளனர். இப்போதுள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி பா.ஜனதா தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. ஆனால் அதற்கான எந்த அவசியமும் இப்போது தமிழகத்தில் ஏற்படவில்லை.

    பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஊழலும், லஞ்சமும், சாதிய வேறுபாடுகளும் அதிகரித்துள்ளன. இந்தியாவையே ஆளுவதற்கு அவர்களிடம் ஒப்படைத்தோம். இபோது அனைவரையும் பிச்சைக்காரர்களாக்கி விட்டனர்.

    கழகமில்லா தமிழகம், கவலையில்லா தமிழகம் என்று பா.ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழக நலன்கள் அனைத்தையுமே புறந்தள்ளி விட்டு எப்படி அவர்களால் இதுபோன்று பேச முடிகிறது என்று தெரியவில்லை. எனவே தமிழகத்தில் ஒரு போதும் பா.ஜனதா கால்பதிக்க முடியாது.

    தோல்வி பயம் காரணமாகவே குஜராத் தேர்தல் நேரத்தில் ஜி.எஸ்.டி. வரியை குறைத்துள்ளனர். தமிழக தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி எப்போதுமே தனித்தே போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு எந்த காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.

    தமிழர் நலன் சார்ந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள். அவர்களுடன் கை கோர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×