search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் வாரிய ஊழல்கள் தடுக்கப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
    X

    மின் வாரிய ஊழல்கள் தடுக்கப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    மின்வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் தடுக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அளவீட்டுக்கருவிகளை கொள்முதல் செய்வதில் ரூ.12.50 கோடி அளவுக்கு நடைபெறவிருந்த ஊழல் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஊழல் செய்வதையே ஒற்றை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு அளவீட்டுக் கருவிகள் கொள்முதல் சிறந்த உதாரணம் ஆகும். ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் போது குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பவருக்கு தான் ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதியாகும். அதன்படி கேபிடல் பவர் நிறுவனம் ரூ.452-க்கு அளவீட்டுக் கருவிகளை வழங்க முன்வந்த நிலையில் அதற்குத் தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 42 ரூபாய் அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது என்றால், ஆட்சியாளர்களின் தூண்டுதலில், தெரிந்தே ஊழல் செய்யப்பட்டிருக்கிறது என்று தான் கருத வேண்டும்.



    தமிழக அரசில் ஊழல் மலிந்த துறைகளில் முதன்மையானது மின்துறை ஆகும். தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. மின்சார வாரியத்தால் நடைபெறும் ஊழல்களால் ஆட்சியாளர்கள் பயனடைகிறார்கள். மின்வாரியம் நலிவடைகிறது. இதன் பாதிப்புகளை மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அனுபவிப்பது பொதுமக்கள் தான்.

    மின்வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் அரசுக்கும், மக்களுக்கும் பெரும் தீங்கை இழைத்துவிடும் என்பதால் அதை தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, மின்வாரியத்திற்கு அளவீட்டுக்கருவிகள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×