search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநின்றவூர் அருகே தாங்கல் ஏரி நிரம்பி வீடுகளில் வெள்ளம் புகுந்தது
    X

    திருநின்றவூர் அருகே தாங்கல் ஏரி நிரம்பி வீடுகளில் வெள்ளம் புகுந்தது

    தொடர் மழையால் தாங்கல் ஏரி முழுவதும் நிரம்பியதால் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள வீடுகளில் புகுவதால் மக்கள் அவதி அடைகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருநின்றவூர் அருகே உள்ள நத்தமேடு ஊராட்சிக்குட்பட்ட பாலாஜிநகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி 4 இணைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 4-வது இணைப்பு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அங்கீகாரத்துடன் அரசு ஊழயர்கள் நிலத்தை வாங்கி வீடு கட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் தொடர் மழையால் அருகில் உள்ள தாங்கல் ஏரி முழுவதும் நிரம்பியது. ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள பாலாஜி நகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. தாழ்வான பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். அவர்கள் தெருக்களில் தேங்கி இருக்கும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி வர வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் அவர்கள் மாலை 6 மணிக்குள் வீட்டிற்கு திரும்பி விட வேண்டும். இல்லையெனில் பாம்பு, தேள் போன்ற வி‌ஷ பூச்சிகள் தண்ணீரில் நீந்தி வருகின்றன. இதுவரை 3 பேரை பாம்பு கடித்துள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தாங்கள் ஏரியில் நீர் செல்லும் மதகு அருகே மீன் பண்ணை அமைத்து மீன் வளர்த்து வருகின்றனர். இதனால் ஏரி நிரம்பி நீர் செல்லும் போது மீன் வளர்க்க பாதிப்பு ஏற்படும் என்பதால் மதகு அடைக்கப்பட்டு உள்ளது.

    ஆண்டுதோறும் மழை காலங்களில் அதிகாரிகளிடம் மனு கொடுப்பதும், நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தொடர்மழை காரணமாக சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த 10 நாட்களாக மழைநீர் சூழ்ந்திருக்கிறது.

    கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் மேலூர், அத்திப்பட்டு, வல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் தாழ்வான பகுதியான அத்திப்பட்டு புதுநகருக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதனை பொதுமக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி அடைத்து வருகிறார்கள்.

    ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். எனினும் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் 10 நாட்களுக்கு மேலாகியும் குறையவில்லை.

    ஏராளமானோர் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் ரெயில் நிலையங்களில் தங்கி இருக்கிறார்கள்.

    மரணம் அடைந்தவர்களின் உடல்களை வெளியே கொண்டு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை புதியதாக கட்டியுள்ள ரே‌ஷன் கடையின் அருகே வைத்து எடுத்து வருகிறார்கள்.

    தொடர்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×